"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
தவெக செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ் மொழி சார்ந்த விஷயங்களில் தலையிட மத்திய அரசுக்கு உரிமை இல்லை என பாஜகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்.
திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுகின்றனர் என்றும் தமிழ் மொழி சார்ந்த விஷயங்களில் தலையிட மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்றும் தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிரான தவெகவின் நிலைப்பாடு:
பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்தில் தவெகவின் செயற்குழு கூட்டம் நடந்தது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள், இதில் கலந்து கொண்டனர். தவெகவின் முதல் மாநில மாநாட்டில் திமுக, பாஜகவை நேரடியாக விமர்சிக்காமல் மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில், செயற்குழு கூட்டத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் விஜய்.
குறிப்பாக, நீட் தேர்வுக்கு எதிராகவும் தமிழ் மொழியை முன்வைத்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "முதலில் திருவள்ளுவருக்கு வர்ணம் பூசினர். அடுத்து தமிழகம் வேறு, தமிழ்நாடு வேறு என்றனர். அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். பிளவுவாத அரசியல் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிப்போர்.
எங்கள் தாய்மொழித் தமிழ் மட்டுமல்லாமல், தமிழ்மொழி சார்ந்த எந்த ஒன்றிலும் தலையிட ஒன்றிய அரசுக்கு மட்டுமல்ல. ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக இங்கு நியமிக்கப்படுகிற எவருக்கும் எந்தவித உரிமையும் இல்லை. மொழி உரிமையே எங்கள் தமிழ்த் திருநாட்டின் முதல் உரிமை என்ற எங்கள் கொள்கைப்படி, எங்கள் தாய்மொழி காக்கும் எல்லா முயற்சிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சமரசமின்றிச் செயல்படும்.
அதிரடி காட்டும் விஜய்:
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக, மூன்றாவது மொழியைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசின் கனவு. எமது மொழிப்போர் தியாகிகள் வாழ்ந்த மண்ணில் எக்காலத்திலும் நிறைவேறாது என்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உரக்கச் சொல்லிக்கொள்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக திராவிட கட்சிகள் முன்னிறுத்தும் இருமொழி கொள்கையையும் கையில் எடுத்துள்ளது தவெக. இதுதொடர்பாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே கட்சியின் முக்கிய செயல் திட்டமாக இருமொழி கொள்கையை தவெக அறிவித்திருந்தது.
அதேுபோல, திமுகவை போன்று மத்திய அரசு என குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என தவெக குறிப்பிட்டு வருகிறது. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஈர்க்கும் வகையில் தவெக இம்மாதிரியான நகர்வுகளை எடுத்து வருகிறது.
இதையும் படிக்க: MG NREGA: 100 நாள் வேலை திட்டம் - தமிழ்நாட்டின் ஒரே மாவட்டத்தில் ரூ 34 கோடி மோசடி - ஆய்வில் அம்பலம்