TN Urban Local Body Election:மேயர் மற்றும் நகராட்சி தலைவரை தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் தேதி இதோ..
தமிழ்நாட்டிலுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுடைய பதவி காலம் முடிவடைந்தும் நீண்ட காலம் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த 2021ஆம் வருடம் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வந்தது.
இன்று அதற்கான தேதியை தமிழ்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று வெளியிட்டார். அதன்படி மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 21 மாநகராட்சிகளின் மேயர் மற்றும் 138 நகராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு வரும் மார்ச் 4ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் மார்ச் 2ஆம் தேதி பதவியேற்ற பிறகு இந்தத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மறைமுகத் தேர்தல் நடைபெறும் பதவிகள்:
மாநகராட்சி மன்ற மேயர் பதவியிடங்கள்-21
மாநகராட்சி மன்ற துணைமேயர் பதவியிடங்கள்-21
நகராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள்-138
நகராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியிடங்கள்-138
பேரூராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள்- 490
பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியிடங்கள்- 490
உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டிய தொகையின் விவரம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை:
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி- 500 ரூபாய்
நகராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி-1000 ரூபாய்
மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி-2000 ரூபாய்
இதர வகுப்புகளை சேர்ந்த நபர்கள் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை :
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி- 1000 ரூபாய்
நகராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி-2000 ரூபாய்
மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி-4000 ரூபாய்
இந்த வைப்புத் தொகையை செலுத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: பிப்ரவரி 19-ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்