TN Urban Local Body Election: பிப்ரவரி 19-ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்
TN Urban Local Body Election 2022 Date: தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இன்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Urban Local Body Election Tamil Nadu: தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுடைய பதவி காலம் முடிவடைந்தும் நீண்ட காலம் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த 2021ஆம் வருடம் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதற்கான தேதியை தமிழ்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று வெளியிட்டார். அதன்படி மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான தேர்தல் தேதிகள்:
வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள்- 28- 01-2022
வேட்புமனு தாக்கல் இறுதி நாள் - 4-02-2022
வேட்பு மனுக்கள் பரிசீலனை - 05-02-2022
வேட்பு மனு திரும்ப பெருவதற்கான கடைசி தேதி - 07 -02-2022
வாக்கு பதிவு நடைபெறும் தேதி - 19 - 02 -2022
வாக்கு எண்ணிக்கை - 22-02-2022
வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், தங்களால் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். அதேசமயம், கொரோனாவின் மூன்றாவது அலை இரண்டாவது அலை அளவுக்கு மோசமாக இல்லை என்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தலை நடத்தலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் படிக்க: தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு !