இனி நீண்ட வரிசையில் நிற்கவேண்டியதில்லை; ஆன்லைனில் பணம் செலுத்தி சாமி தரிசனம் செய்யலாம்
இனி கோயில்களில் நீண்ட வரிசையில் நிற்கவேண்டியதில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி சாமி தரிசனம் செய்ய முடியும்.

இனி கோயில்களில் நீண்ட வரிசையில் நிற்கவேண்டியதில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி சாமி தரிசனம் செய்ய முடியும்.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 471 கோயில்களில் கையடக்கக் கணினி மூலம் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
''வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கோயில்களில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பணம் செலுத்த கையடக்கக் கணினி வாயிலாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை முதற்கட்டமாக சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் திட்டம் 471 கோயில்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரெடிட், டெபிட் கார்டுகளில் பணம் செலுத்திக்கொள்ளலாம்.
மேலும், இந்த ஆண்டு 100 திருக்கோயில்களைப் புனரமைக்க திட்ட வருகிறோம். இதுவரை 300 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. சிறப்பு தரிசனத்துக்கு என தனி வழிமுறைகள் உள்ள நிலையில், பக்தர்கள் அதனை முறையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சிறப்பு தரிசன வழிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதே ஆலயத்திற்கு நன்மை தரும் என்பதை பக்தர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
கோயில்களில் லஞ்சம் வாங்கிக் கொண்டு சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். கலகத்தை உண்டாக்குவது, பிரச்சினை ஏற்படுத்துவது, மதம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவது திராவிட மாடல் அல்ல. பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முதலமைச்சர் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார்''.
இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், எஸ்பிஐ வங்கி உதவி பொது மேலாளர் மனோஜ் குமார், முதுநிலை கணக்கு மேலாளர் பிரசன்னா, தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப இயக்குநர்கள் கீதாராணி, கோவிந்தன் மற்றும் பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






















