(Source: ECI/ABP News/ABP Majha)
Tiruvannamalai: ஜனநாயக ரீதியாக பொதுமக்களுக்கு போராட்டம் நடத்த தார்மீக உரிமை உண்டு - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
ஜனநாயக ரீதியாக போராட வந்த மக்களை காவல்துறை அனுமதி மறுத்ததால் ஏற்பட்டுள்ள மோதலுக்கு கலவரத்திற்கும் காவல் துறையே காரணம் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் பேட்டி.
திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் மலைகள், காடுகளை அழித்து குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் புனல் காடு கிராம மக்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புனல்காடு கிராமத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்பிறகு போராட்ட காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு முயற்சித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே வந்தனர். ஆட்சியர் அலுவலகம் முழுமையாக மூடப்பட்டது. சுடு தரையிலேயே போராட்டதில் ஈடுபட்டோர் அமர்ந்தனர். பிறகு அங்கேயே சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய தலைவர்களை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதி காத்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சண்முகம் மற்றும் முக்கிய தலைவர்கள் புனல் காடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் என மாவட்ட ஆட்சியரிடம் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் முடிவில் அங்கு கட்டாய குப்பை கிடங்கு அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் விவசாயிகள் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். எனினும் கிராம மக்கள் அந்த கிராமத்தில் கட்டாயம் குப்பை கிடங்கு கூடாது என உறுதியாக இருப்பதால் நாளைய தினம் மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் புனல் காடு கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து விவசாய சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் பேசியதாவது:
ஜனநாயக ரீதியாக போராட மற்றும் பேரணி நடத்த அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு எனவும் தார்மீக அடிப்படையில் போராட்டம் நடத்த வந்த தங்களை காவல்துறை தனது அடக்குமுறையால் கலவர பூமியாக மாற்றியதாகவும் இதற்கு முழு பொறுப்பு காவல்துறையை சாரும் எனவும் தமிழகத்தில் மக்கள் போராட்டம் நடத்துவது அவர்கள் உரிமை எனவும் அவர்களது உரிமையை தடுக்கும் நோக்கில் செயல்பட்ட திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை செயல் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதுபோன்று மக்கள் போராட்டங்களை அடக்கு முறையை கையாள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.