PG Medicos Conselling: ஆன்லைனில் மருத்துவர் மறுபணிக்கான கவுன்சிலிங்; ‛வெளிப்படைத்தன்மை’ என டாக்டர்கள் வரவேற்பு
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்தாய்வுகளின் வழியாக மருத்துவப்பணியிடங்களை நிரப்பாமல் நேரடியாக நியமனம் செய்ததாக புகார் எழுந்தது.இதுதொடர்பாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முதுநிலை மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்த மருத்துவர்களுக்கான மறுபணிக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கி ஆன்லைன் வழியாக நடைபெற்றுவருகிறது. கலந்தாய்வு நடத்தக்கோரி கடந்த மூன்றாண்டுகளாக அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில் தற்போது ஆன்லைன் வழியாகக் கவுன்சிலிங் நடத்தப்படுவதை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் உட்பட பல்வேறு மருத்துவர்கள் தரப்பு வரவேற்றுள்ளது.
முதுநிலை மருத்துவ மேற்படிப்பு முடித்த மருத்துவர்களுக்கான கலந்தாய்வு என்றால் என்ன?
அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே பணிபுரிந்து பட்டமேற்படிப்பை முடித்த மருத்துவர்களை கலந்தாய்வின் வழியாக அவர்கள் தேர்ந்தெடுக்கும் பகுதிகளில் மறுபணிக்கு நியமிப்பது முதுநிலை மருத்துவ மேற்படிப்பு முடித்த மருத்துவர்களுக்கான கலந்தாய்வு எனப்படும். இந்த மருத்துவர்களுக்கான கலந்தாய்வு கடைசியாக ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அவரது ஆட்சியில்தான் நடைபெற்றது. ஆனால் அவருக்குப்பிறகான எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்தாய்வுகளின் வழியாக மருத்துவப்பணியிடங்களை நிரப்பாமல் நேரடியாக நியமனம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
இதற்கிடையேதான் தற்போது புதிதாகப் பொறுப்பேற்று இருக்கும் தமிழ்நாடு அரசு முதுநிலை மருத்துவபடிப்பு முடித்த அரசு மருத்துவர்களுக்கான கலந்தாய்வை நடத்தியுள்ளது.
மருத்துவர்கள் வரவேற்பு
இதனை வரவேற்றுள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், ’ பட்டமேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு நடைபெற்ற ஆன்லைன் கவுன்சலிங், முறையாக அறிவிக்கப்பட்டு, மிகவும் வெளிப்படைத் தன்மையுடனும் காலியாக உள்ள இடங்களை முன்னரே அறிவித்து, நடைபெற்றதை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வெகுவாக வரவேற்று தமிழக அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறது. கடந்த மூன்று வருடங்களாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் கோரிக்கையான பட்ட மேற்படிப்பு முடித்த மாணவர்கள் கவுன்சிலிங் நடைபெறாத நிலையில், தாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே கொரோனா பெருந்தொற்றில் களப்பணியாற்றிவரும் பட்ட மேற்படிப்பு முடித்த மாணவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கான தேவைகளை அறிந்து ஊக்கத்தொகை அறிவித்தது மட்டும் அல்லாமல், கவுன்சிலிங் வெளிப்படையாக நடத்தியதற்கு அனைத்து அரசுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர். இது போன்று மருத்துவர்களும் இந்த அரசுக்கு வெளிப்படையாக அனைத்து காலியிடங்களையும் காட்டி கவுன்சிலிங் கடந்த 10 வருடங்களில் நடந்தது இல்லை’ என அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெண்களுக்கான உரிமை மறுக்கப்பட்டதா?
இது ஒரு பக்கமிருக்க, ‘மருத்துவப்பணியிடங்கள் அத்தனையும் கலந்தாய்வில் காட்டப்படவில்லை மற்றும் மகப்பேறு விடுப்பில் இருந்த 15 பெண் மருத்துவர்கள் கலந்தாய்வில் அனுமதிக்கப்படவில்லை’ எனச் சுட்டிக்காட்டியுள்ளார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மருத்துவர் ரவீந்திரநாத்.அவர் கூறுகையில் ’ஆன்லைன் மூலம் தற்பொழுது கவுன்சிலிங்கை நடத்துவது மனமாறப் பாராட்டத்தக்கது. ஆயினும், இந்த கவுன்சிலிங்கில் ,மகப்பேறு விடுப்பெடுத்த 15 க்கும் மேற்பட்ட பெண் மருத்துவர்கள் அனுமதிக்கப்படவில்லை.அவர்களின் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை.இது பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது.இக்குறைபாட்டைப் போக்கிட உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.மகப்பேறு விடுப்பு எடுத்த பெண் மருத்துவர்களின் பெயர்களை இணைக்காமல் கவுன்சிலிங்கை நேற்றைய தினம் தொடங்கியது சரியல்ல.எனவே, மகப்பேறு மருத்துவர்களின் பணிமூப்பு அடிப்படையில் அவர்களுக்கு பணி இடங்கள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.பல துறைகளில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை வெளிப்படையாக காட்டாமலேயே, கவுன்சிலிங் நடைபெறுவதாக,பல மருத்துவர்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, மகப்பேறு விடுப்பு எடுத்த பெண் மருத்துவர்களின் நலன் பாதுகாக்கப் படும் வகையிலும், அனைத்து காலிப் பணியிடங்களையும் வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்தும் கவுன்சிலிங்கை நடத்திட வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ - விரைவில் வெளியாகும் பட்ஜெட் ஸ்மார்ட் போன்