TN Ministers: தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றமா.? முக்கிய அமைச்சர்கள் பதவி பறிப்பா? இளம் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பா..?
தமிழ்நாடு அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், டாக்டர் எழிலன் ஆகியோருக்கு புதியதாக வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், திமுகவின் மூத்த தலைவர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த துரைமுருகனுக்கு நீர்வளத்துறை, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கே.என். நேருவுக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த எ.வ.வேலுவிற்கு நெடுஞ்சாலைத்துறை வழங்கப்பட்டது.
சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்:
ஆட்சி தொடங்கியதில் இருந்தே பல்வேறு அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கிய வண்ணம் இருந்தனர். குறிப்பாக, அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை சாதியை சொல்லி திட்டி மிரட்டியதாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரி (பி.டி.ஓ.) குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது. இந்த விவகாரம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழ்நாடு அமைச்சரவையில் முதல் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்து அமைச்சராகவும் மாற்றப்பட்டனர்.
இதற்கிடையே, சில மூத்த தலைவர்கள், அமைச்சர் பதவி ஒதுக்கியதில் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஐ.பெரியசாமி, கட்சி தலைமையிடமே அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.
அதிருப்தியில் ஐ. பெரியசாமி..?
இதனை தொடர்ந்து, அமைச்சரவையில் இரண்டாவது மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. 4 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டது. அதிருப்தியில் இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்புத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையில் மூன்றாவது மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளாகும் நிலையில், மே இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்கவும், சில முக்கிய அமைச்சர்களை நீக்க முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுமுகங்கள் சிலருக்கு அமைச்சராகும் வாய்ப்பு வழங்குவதோடு, சிலரின் இலாகாக்களை மாற்றியமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.
கொங்கு மாவட்ட அமைச்சர் நீக்கம்.?
குறிப்பாக, கொங்கு மாவட்டத்தை சேர்ந்த பெண் அமைச்சரை நீக்க தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய அமைச்சரை நீக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு பதிலாக, புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிதாக, டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், டாக்டர் எழிலன், அப்துல் வஹாப், இனிகோ இருதயராஜ், தமிழரசி, காதர் பாட்சா முத்துராமலிங்கம், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.