Headlines Today, 9 Sep: சட்டப்பேரவை அறிவிப்புகள்.. டி20 இந்திய அணி.. இன்றைய முக்கியச் செய்திகள்!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலங்கள் நடத்துவதற்கும் தடைவிதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் என்ற புதிய ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வகை செய்யும் சட்ட மசோதா நடப்பு கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் மதச்சார்பின்மை கோட்பாடு, மத நல்லிணக்கத்திற்கு உகந்ததாக இல்லை என்றும், அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுப்டுத்தி பார்க்கும் வகையில் சிஏஏ சட்டம் உள்ளதாகவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல கிராமங்களில் சாதிவேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக்கூடாது என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
2022-23ம் ஆண்டு ராபி சந்தை பருவத்துக்கு, அனைத்து கட்டாய ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,975-லிருந்து ரூ.2,015 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு மற்றும் எள்ளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 400 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகளை இனி பெண்களும் எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இது வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்றும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கேரளாவில் நிஃபா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 68 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
The Reunion we all have been waiting for 🤝 @msdhoni returns to mentor #TeamIndia for the #T20WorldCup 🙌
— BCCI (@BCCI) September 8, 2021
How excited are you to see him back? 💙 pic.twitter.com/znPWBLeYNo
உலக கோப்பை டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில், துணை கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் பட்டேல், சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், வருண் சக்கரவர்த்தி, ராகுல் சஹார் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.