TN Rain Alert: தமிழ்நாட்டில் வரும் 6-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்.. ஒரு முழு ரிப்போர்ட்
தமிழ்நாட்டில் வரும் 6 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (31-12-2023) அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் வரும் 6 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத விதாமாக வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல் சென்னைக்கு மிக அருகே மிக்ஜாம் புயல் கடந்து சென்றதன் காரணமாக சென்னையிலும் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை மிதமான மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டின் முதல் வார இறுதியில் இருந்து தான் தமிழ்நாட்டில் மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேபோல், மக்கள் அச்சப்படும் அளவு மழை இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
04.01.2024 வரை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
01.01.2024 மற்றும் 02.01.2024: லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03.01.2024: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04.01.2024: லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.