TN Weather Update: வறண்ட வானிலையில் லேசான மழை? வானிலை நிலவரம் சொல்லும் தகவல் இதோ..
TN Weather Update : தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Weather Update : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 31 ஆம் தேதி ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஜனவரி 31 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உறைபனி எச்சரிக்கை:
25.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் குளிர்காலமாகும். இந்த மூன்று மாதங்களும் பகல் நேரங்களில் அதிக வெயிலின் தாக்கமும், இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவும். குறிப்பாக அதிகாலை நேரங்களில் புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது படிந்துள்ள நீர் துளிகள் பனித்துகள்களாக படிந்து உறைப்பனியாக காட்சியளிப்பது வழக்கம். இதனால் உதகை குதிரை பந்தைய மைதானம், காந்தள், தலைக்குந்தா , அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் உள்ள புல்வெளி மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. குறிப்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும் உறை பனி சுமார் அரை அடி அங்குலத்திற்கு உறை பனி படிந்திருந்தது.
கடந்த வாரம் உறை பனி பொழிவு காரணமாக உதகை நகரப்பகுதியில் 2.8 டிகிரி செல்சியஸும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
28.01.2024 மற்றும் 29.01.2024: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.