TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகள் குறித்து தமிழக உளவுத்துறை ரகசிய விசாரணயை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TVK DMK: தவெக மாநாட்டில் கூடியது ரசிகர்களா? வாக்காளர்களா? என்ற நோக்கில், உளவுத்துறை ரகசிய விசாரணயை நடத்துவதாக கூறப்படுகிறது.
தவெக மாநாட்டில் குவிந்த மக்கள்:
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, முதல் மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். அதில் பேசிய விஜய் திமுகவை தனது அரசியல் எதிரியாக அறிவித்ததோடு, 2026ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வோம் எனவும் சூளுரைத்தார். அதோடு, தங்கள் தலைமையில் ஆட்சி அமைந்தால், ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வழங்கப்படும் எனவும் அறிவித்து சலசலப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், அடுத்தடுத்து வெளியாகும் தகவல் தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
களமிறங்கிய உளவுத்துறை:
விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற தவெக நிர்வாகிகளின் பட்டியலை தயாரித்து, அவர்கள் எத்தனை வாகனங்களில் மாநாட்டிற்கு சென்றனர், அதில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது போன்ற தகவல்களை உளவுத்துறை சேகரித்து வருவதாக அக்கட்சியினர் தெரிவித்துளனர். குறிப்பாக சென்னையில் வார்டு வாரியாகவும், மற்ற பகுதிகளில் மாவட்ட வாரியாகவும் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளின் பட்டியல் சேகரிக்கப்படுவதாக வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கு யார் தலைமையில் சென்றார்கள் என்பது குறித்த தகவல்களையும் உளவுத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். மாநாட்டில் திரண்டது ரசிகர்களின் கூட்டமா அல்லது வாக்காளர்களா என்பதை ஆய்வு செய்ய உளவுத்துறை மூலம், திமுக தலைமையிலான அரசு ரகசிய விசாரணை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தரவுகள் எதற்காக?
தவெக மாநாட்டில் பங்கேற்றவர்களின் வயது, முகவரி மற்றும் அவர்கள் மற்ற கட்சியை சேர்ந்தவர்களா, அவர்களின் சொந்த ஊர் என்ன, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர்? போன்ற தரவுகள் இதில் சேகரிக்கப்படுகின்றன. காவல்துறையினர் சேகரிக்கும் தகவலை வைத்து வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை ஒப்பிட்டு விவரங்களை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, வாக்காளர் பட்டியலில் உள்ள தவெக நிர்வாகிகளின் பெயர்களை, திமுகவினர் நீக்கி வருவதாக அண்மையில் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தான், தவெக நிர்வாகிகளின் விவரங்களை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை களமிறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக Vs தவெக:
2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விஜய் Vs உதயநிதி என அமையும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாகவே திமுகவின் இரண்டாம்கட்ட தலைவர்கள் விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர், மறைமுகமாக விஜயை விமர்சித்துள்ளனர். இந்த சூழலில் தான், வாக்காளர் பட்டியலில் இருந்து தவெகவிற்கு ஆதரவானவர்களை திமுகவினர் நீக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, நிர்வாகிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.