Marudhamalai Murugan: திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியா? ரூ.146.83 கோடி பட்ஜெட்டில் முக்கிய திட்டம் - பக்தர்கள் குஷி
Marudhamalai Murugan Statue: உலகின் உயரமான முருகன் சிலையை மருதமலையில் நிறுவ உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Marudhamalai Murugan Statue: மருதமலையில் முருகன் சிலையை நிறுவ இந்து சமய அறநிலையத்துறை 146 கோடியே 83 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
உலகின் உயரமான முருகன் சிலை:
வாக்களித்தவர்களுக்கானதாக மட்டுமின்றி வாக்காளிக்காதவர்களுக்கும் சேர்த்து, தனது தலைமையிலான அரசு உழைத்து வருவதாக முதலமைச்சர் பேசி வருகிறார். அதன்படி, முற்போக்கு சித்தாங்களை கொண்ட திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை இதுவரை இல்லாத பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தான், ஆதரவையும் எதிர்ப்பையும் பெறும் வகையில் முருகப்பெருமானுக்கு மூன்று சிலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை, இந்துசமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அண்மையில் அறிவித்தார். இதில் கோயம்புத்தூரில் உள்ள மருதமலையில் 184 அடி உயரத்தில், அதவாது உலகின் மிக உயரமான முருகன் சிலையை அமைக்கும் அறிவிப்புமடங்கும். இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.146.83 கோடியாக இருக்கும், மருதமலை சிலைக்கு மட்டும் ரூ.110 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ”கடவுள் சிலை”
மலேசியாவின் பட்டு குகைளில் உள்ள 140 அடி உயர சிலை தான், உலகின் உயரமான முருகன் சிலை என்ற பெருமையை நீண்ட காலமாக கொண்டிருந்தது. ஆனால், கடந்த 2022ம் ஆணுட் ஏப்ரல் மாதம் சேலம் மாவட்டம் ஏதாப்பூரில் உள்ள ஒரு தனியார் கோவிலில் 146 அடி உயர முருகப்பெருமான் சிலை திறக்கப்படது. தற்போது அதுதான் உலகின் மிக உயரமான சிலையாக உள்ளது. இந்நிலையில் தான் மருதமலையில் 'தமிழ் கடவுள்' முருகனின் 184 அடி உயர சிலை அறுகோண வடிவ வளாகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும், அதில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிட வசதிகள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகள் இடம்பெறும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மற்ற இரண்டு சிலைகள்:
மருதமலையை தொடர்ந்து 180 அடி உயர இரண்டாவது சிலையானது ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள வேலாயுதசுவாமி கோயிலில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக 6 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் 114 அடி உயர முருகன் சிலையானது ராணிபேட்டை மாவட்டம் குமரகிரியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் அமைக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் சேகர்பாபுவால் அறிவிக்கப்பட்டது.
குடமுழுக்கும், நிலம் மீட்டெடுப்பும்:
கடந்த 2021ம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலே, இது ஒரு இந்து விரோத ஆட்சி என பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே, அதனை திறம்பட கையாண்டு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை சேகர்பாபு மழுங்கடிக்க செய்துள்ளார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல், பழையை கோயில்களை புனரமைத்து கும்பாபிஷேகங்களை நிகழ்த்துவது, பெண் ஓதுவர்களை ஊக்குவித்தல் மற்றும் கோயில்களில் பிராமணரல்லாத அர்ச்சகர்களை நியமித்தல் என துறையின் சாதனைகள் நீள்கின்றன.
எதிர்க்கும் தோழர்கள்:
திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு, தோழமை அமைப்புகளிடமிருந்தே எதிர்ப்புகளும் கிளம்பிய வண்ணம் உள்ளன. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற முருகப் பெருமானைப் பற்றிய சர்வதேச மாநாட்டின் போது, திராவிடக் கட்சி அதன் பகுத்தறிவு கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதாக கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டின. மதச்சார்பற்ற கொள்கைகளை நிலைநிறுத்தவும், மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதைத் தவிர்க்கவும் சிபிஎம் திமுகவை வலியுறுத்தியுள்ளது. பள்ளிகளில் கந்த சஷ்டி பாராயணம் மற்றும் கல்லூரிகளில் ஆன்மீகப் படிப்புகள் குறித்த தீர்மானங்களுக்கு விசிக பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது துறையின் சாதனைகள் குறித்து "அதிக உற்சாகமாக" இருப்பதை திராவிடர் கழகத் தலைவர் கே.வீரமணி எச்சரித்துள்ளார். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே என்று சேகர்பாபு தெளிவுபடுத்தினார்.






















