TN Governor: ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்.. நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கவில்லையா? ஆளுநர் பரபரப்பு விளக்கம்
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி. ரமணா ஆகியோரை சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
ஊழல் வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி நேற்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதினார்.
முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றுகிறாரா ஆளுநர்?
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி. ரமணா ஆகியோரை சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. எனவே, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர சிபிஐ அனுமதி கோரியுள்ளதாக கடிதத்தில் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டிருந்தார்.
சிபிஐயின் கோரிக்கைக்கு அனுமதி வழங்குமாறு மாநில அமைச்சரவை கடந்த 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால், அமைச்சரவையின் கடிதத்திற்கு பதில் அளிக்கவில்லை என்றும், இதன் காரணமாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் ஆளுநருக்கு அமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.
அதேபோல, அதிமுக ஆட்சி காலத்தில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக பதவி வகித்த கே.சி. வீரமணிக்கு எதிராகவும் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராகவும் ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு தொடர அனுமதி கோரியிருந்தது. அனுமதி வழங்கக் கோரி ஆளுநருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தது.
ஆளுநர் மாளிகை விளக்கம்:
ஆனால், இதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் அமைச்சர் கூறியிருந்தார். ஊழல் வழக்குகளில் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அமைச்சரவை வழங்கிய பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தாமதம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது.
பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும் இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அதேபோல, கே.சி. வீரமணிக்கு எதிராக ஊழல் தடுப்பு பிரிவு தொடர்ந்த வழக்கை பொறுத்தவரையில், விசாரணை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை மாநில அரசு சமர்பிக்க வேண்டும். ஆனால், இன்னும் அதை சமர்பிக்காத காரணத்தால் அதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கில் மாநில அரசிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என தமிழ்நாடு அமைச்சர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி வழங்க மறுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.