Governor RN Ravi: திமுகவுக்கு செக்...? பட்டியலோடு டெல்லிக்கு புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி..!
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இரண்டு நாள் பயணமாக, ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழக அரசு Vs ஆளுநர்
ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றது முதலே அவருக்கும், ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, அரசு தயார் செய்து கொடுத்த உரையில் இருந்த பல வார்த்தைகளை தவிர்த்தார். இதன் காரணமாக, அவரது முன்னிலையிலேயே ஆளுநரின் பேச்சுக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
குடியரசு தலைவரிடம் புகார்
தொடர்ந்து, தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக, அரசு சார்பில் மட்டுமின்றி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மூலமாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும், கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த திமுக குழு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் புகார் மனுவை வழங்கியது. இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக ஆளுநரிடம் எந்நேரத்திலும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் கோரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
டெல்லி புறப்பட்ட ஆளுநர்
இந்நிலையில் தான், ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார். அப்போது, தன்னிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள், அதனை நிலுவையில் வைத்திருப்பதற்கான காரணங்கள் அடங்கிய கோப்புகளையும் ஆளுநர் உடன் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகார்களை பட்டியலிட திட்டம்:
தமிழ்நாடு அரசு அளித்த புகாரின் பேரில் பதிலளிக்க டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அப்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், திமுக அமைச்சர்கள் மீதான புகார்களை பட்டியலிடவும் ஆளுநர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தலைவரை சந்தித்த பின் பேசிய டி.ஆர். பாலு:
ஆளுநர் மீதான புகார் மனுவை அளித்த பிறகு டெல்லியில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சட்டப்பேரவையில் தமிழக அரசு தயாரித்த உரையில் சிறு எழுத்தைக்கூட அப்போதைய ஆளுநர்கள் மாற்ற மாட்டார்கள். ஆனால் இந்த ஆளுநர் சில வார்த்தைகளை சேர்த்தும் நீக்கியும் இருக்கிறார். வழக்கத்துக்கும், இயல்புக்கும் மாறாக நடந்த சம்பவங்கள் குறித்து குடியரசுத் தலைவரிடம் விவரித்தோம். I will see என்று குடியரசு தலைவர் தெரிவித்தார். தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்தது மோசமான, இழிவான செயல். அதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகம் பெரியார் மண். இங்கு ஆர்எஸ்எஸ், சனாதனக் கொள்கைகள் செல்லுபடி ஆகாது. அதைத் திணிப்பதே ஆளுநரின் நோக்கம்.” என கூறினார்.