ஒப்புதல் அளித்த தமிழ்நாடு ஆளுநர்..! அமலுக்கு வரும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வருகிறது.
இதையடுத்து தடையை மீறி ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
முன்னதாக, பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்து வந்ததால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தடை செய்து தீர்மானம் கொண்டு வந்தது.
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தடையை மீறி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு என்ன தண்டனை என்பதை கீழே காணலாம்.
- ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 3 மாத சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் - இரண்டும் சேர்த்து தண்டனை வழங்கப்படும்.
- சூதாட்டத்தை நடத்துபவருக்கு ரூ. 10 லட்சம் அல்லது 3 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்கப்படும்.
- தெரிந்தே இரண்டாவது முறையாக தவறு செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை வழங்கப்படும்.
- ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.
- தமிழ்நாட்டிற்க்குள் எந்த ஒரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடமுடியாதவாறு தடை அமல்படுத்தப்படும்.
- செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படும்.
- சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை.
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ததற்கான காரணம் என்ன..?
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டை தடை செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு, கடந்த ஜூலை மாதம் 28 ம் தேதி தனது பரிந்துரைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.அதை தொடர்ந்து, அந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள் குறித்தும், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது பற்றியும் அன்றைய தினமே அமைச்சரவை கூட்டத்தில் துறை வாரியாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
71 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் அதனை விளையாடுபவர்களின் திறன்கள் எந்த விதத்திலும் அதிகரிப்பதில்லை என்றும் மாறாக அவர்களுடைய திறன்களை குறைக்கும் வேலைகளையே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் செய்கின்றன. விளையாடும் நபர்களை ஆன்லைன் விளையாட்டுகள் அடிமையாக்குன்றன என்றும் அதோடு அவர்களை கடனாளியாக்கும் திட்டத்துடனே அவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஆன்லைன் விளையாட்டுகளால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 17 மரணங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள நீதியரசர் சந்துரு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் பிரதான நோக்கம் லாபமாக இருக்கிறதே தவிர, விளையாடுபவர்களின் திறன்களை மேம்படுத்துவதாக இல்லை. அதனால், இதுபோன்ற விளையாட்டுகள், விளையாட்டுகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு கூட தகுதியற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.