TN Governor Ravi: திராவிடம் என்றால் தமிழ்நாடு என்று அர்த்தமில்லை; ஆளுநர் ரவி எடுத்த பாடம் யாருக்கு?
TN Governor Ravi: திராவிடம் என்றால் தமிழ்நாடு என்று அர்த்தமில்லை என தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
TN Governor Ravi: திராவிடம் என்றால் தமிழ்நாடு என்று அர்த்தமில்லை என தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த ஒரே பாரதம் உன்னத பாரதம் இணைக்கும் பாரதம் தொடர் திட்டம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கினை தமிழ்நாடு ஆளுநர் ரவி இன்று (10/10/2022) தொடங்கி வைத்தார். அவர் பேசியுள்ளது தற்போது பேசு பொருளாகியுள்ளது.
அந்த நிகழ்வில் ஆளுநர் ரவி பேசியதாவது, ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவை இணைத்தனர் என பலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையில்லை. அதே நேரத்தில் இந்தியா என்பது ஒருபோதும் ஒருவரின் ஆட்சியின் கீழ் இருந்தது இல்லை. 1905-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வங்காளத்தினை மேற்கு வங்கம் எனவும் கிழக்கு விங்கம் எனவும் மதத்தின் அடிப்படையில் பிரித்தபோது, தமிழ்நாடில் இருந்து வா.உ. சிதம்பரம், பாரதியார் ஆகியோர் அதனை எதிர்த்து போராடினார்கள். மேலும், பஞ்சாப்பில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையினை எதிர்த்து தமிழ்நாட்டில் காமராஜர் போராடியுள்ளார். தமிழ்நாட்டில் எதுவும் நடக்கவில்லை, எங்கோ நடக்கிறது என அவர்கள் அமைதியாக இருந்துவிடவில்லை.
நமது இந்தியாவைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்ட நமது பாரத் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். நமது பாரதம் ஒருபோதும் ஒருவரின் கீழ் இருந்ததில்லை. மாறாக தர்மத்தினை பின்பற்றுவதாக இருந்தது. இமையமலை முதல் இறுதி கடற்பகுதி வரை பாரதம் உள்ளது என இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது. 1956ஆம் ஆண்டு வரை மதராஸ் மாகாணமாக இருந்தது, அதன் பின்னர் மொழிவாரி மாகாணமாக பிரிக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா என பிரிக்கப்பட்டது. ஆனால், தற்போது நான், நீ என சண்டை போட்டு வருகின்றனர். ஒற்றுமையாக பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தவர்கள் இன்றைக்கு சண்டை போட்டுக் கொள்கின்றனர். அதேபோல். தேசிய கீதத்தில் உள்ள திராவிட எனும் சொல், தமிழ்நாட்டினை மட்டும் குறிக்கவில்லை. திராவிடம் எனும் சொல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகியவை எல்லாம் சேர்த்துதான் திராவிடம். அதைவிடுத்து இன்றைய அரசியல் கட்சிகள் திராவிடம் என்றால் தமிழ்நாடு என மக்களின் பார்வையை குறுக்கிவிட்டது.
அதிகாரப் பசியில் உள்ள அரசியல் கட்சிகள் மொழி அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும், சாதிப் பிரிவுகளுக்குள் இருக்கும் உட்சாதி பிரிவுகளையும் வைத்து அரசியல் செய்வார்கள். ஆனால் இந்தியா என்பது அனைவருக்கும் இடையில் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ஒற்றுமைகளை அடிப்படையாகக் கொண்டது என ஆளுநர் ரவி அந்த நிகழ்வில் பேசியுள்ளார்.
ஆளுநர் ரவியின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு எடுக்கப்பட்ட வரலாற்று வகுப்பு என அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.