(Source: ECI/ABP News/ABP Majha)
Pongal Parisu Thogai 2024: பொங்கல் பரிசு: விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல்.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
Pongal Parisu Thogai 2024: பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக விவசாயிகளிடமிருந்து நேரடி கரும்பு கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Pongal Parisu Thogai 2024: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமாக மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண்துறை இணை இயக்குனர், கூட்டுறவு துறை இணை பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது அரசு பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
- பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பச்சரிசி மற்றும் சர்க்கரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிகக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிகக் கழகக் கிடங்குகளில் இருந்து கூட்டுறவு நியாய விலைக்கடைகளுக்கு நகர்வு செய்ய வேண்டும்
- இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க தேவையான முழு கரும்பினை கணக்கிட்டு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலமே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் /சம்பந்தப்பட்ட மண்டல இணைப்பதிவாளர்கள் செய்துகொள்ள வேண்டும்.
- பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்கள் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் சென்றடைவதை தொடர்புடைய மண்டல இணைப்பதிவாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்திட மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொள்முதல், போக்குவரத்து மற்றும் விநியோக ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவரது நேரடி கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடன் கண்காணித்திட வேண்டும்
- கரும்பு கொள்முதல் செய்ய இணைப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியரால் வட்டார அளவிலான கொள்முதல் குழு தேவையான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு இக்குழுக்களின் மூலமாக மட்டுமே முழுக் கரும்பு கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
- கரும்பை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவிசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த புகார்களை பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். புகார்கள் ஏதுமிருப்பின் நடமாடும் கண்காணிப்பு குழுவிற்கு அதனை தெரிவித்து உடனுக்குடன் புகார்களை தீர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும் தெரிவிக்கலாம் என்று விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.
- இப்பணி குறித்த புகார்கள் எதுவுமிருப்பின் அதனை தெரிவிக்கவேண்டிய வட்ட / மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் இப்பணிக்கென நியமிக்கப்படும் சிறப்பு மேற்பார்வை அலுவலர்கள் (கட்டுப்பாட்டு அறை உட்பட) தொலைபேசி / அலைபேசி எண்களை தெரியப்படுத்த வேண்டும். (இதனை குடும்ப அட்டைதாரர்களுக்கு நன்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
- பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தினை தினந்தோறும் கண்காணித்திடவும் விநியோகத்தின்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவருக்கு பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.