(Source: ECI/ABP News/ABP Majha)
Fishing Ban Relief | மீனவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழக மீனவர்களுக்க ரூபாய் 5 ஆயிரம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடல் வளத்தை பெருக்கும் பொருட்டும், கடல்வாழ் இன உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காகவும் ஆண்டுதோறும் மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதற்கு மீன்பிடித் தடைக்காலம் விதிக்கப்படுவது வழக்கம். இந்த காலகட்டங்களில் தமிழக அரசின் சார்பில் மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடல் மீன்வளத்தை பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந் தேதி நாள் தொடங்கி ஜூன் 14-ந் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ஆம் தேதி நாள் தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மீன்பிடித் தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள், இழுவைப் படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல கடந்த 2008ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, நடப்பாண்டிற்கு ( 2021ம் ஆண்டு) 1.72 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை தலா ரூபாய் 5 ஆயிரம் வீதம் வழங்கிடப்பட உள்ளது. இதற்காக ரூபாய் 86 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 46 ஆயிரத்து 598 பயனாளிகளும், மேற்கு கடற்கரை பகுதியி மாவட்டமான கன்னியாகுமரியைச் சேர்ந்த 25 ஆயிரத்து 402 பயனாளிகளும் என மொத்த்ம 1 லட்சத்து 72 ஆயிரம் பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையானது மீனவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என்று மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் மற்றும் வலைகளை மராமத்து செய்யும் பணிகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள இந்த மீன்பிடித் தடைக்காலத்தில் தற்போது தளர்வில்லாத ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், ஊரடங்கு நிறைவடைந்த பிறகு மீனவர்கள் தங்களது படகுகளுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட மராமத்து பணிகளை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.