TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
டிட்வா புயலால் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என வெளியான அறிவிப்பிற்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

டிட்வா புயல் எதிரொலியாக நாளை பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில், அது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை
டிட்வா புயலால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளுக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது
மேலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை
டிட்வா புயலின் எதிரொலியாக அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் விளக்கம்
இதனிடையே, அரசு பள்ளிகளுக்கு நாளை வழக்கமாகவே விடுமுறை தான் என்றும், பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை தனியாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியிலும் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.





















