TN School Education | பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பணியிடம் ரத்து.. எதிர்ப்பும், ஆதரவும் !
பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் ரத்து செய்யப்பட்டதற்கு ஆசிரியர் கூட்டமைப்பு, கல்வியாளர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் இதற்கு சில கல்வியாளர்கள் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். கல்வித்துறையில் அனுபவம் வாய்ந்தவர் இயக்குநராக இருந்தால்தான் துறையை சிறப்பாக வழிநடத்த முடியும் என்ற கூற்று சரிதானா ? ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் பள்ளிக் கல்வித்துறையை முறையாக வழிநடத்தி செல்ல முடியாதா ?
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர், புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய அரசின் கூட்டம் புறக்கணிப்பு, ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதம் என பல்வேறு அதிரடியான செயல்பாடுகளை மேற்கொண்டு, பாராட்டை பெற்றுவரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதவி ரத்து செய்யப்பட்டது பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குநர் நியமனம் எப்படி நடந்தது ?
பொதுவாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் என்பவர் கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட நபராகதான் இருப்பார். இதுநாள் வரையில் அப்படிப்பட்டவர்தான் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டும் வந்துள்ளார். இந்த நியமனம் என்பது இரண்டு வகையில் நடைபெற்றது. ஒன்று, ஆசிரியராக இருந்து, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, பின்னர் மாவட்ட கல்வி அலுவலராக உயர்ந்து, இணை இயக்குநராக பதவி வகித்து, பல ஆண்டுகள் கள நிலவரம், கல்வி சார்ந்த செயல்பாடுகளை மேற்கொண்டு அதனை நன்கு அறிந்தவர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக புரோமோஷன் அடிப்படையில் நியமிக்கப்படுவார். இரண்டாவது வகை என்பது நேரடி நியமனம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் – 1 தேர்வில் வெற்றி பெற்று DEO எனப்படும் மாவட்ட கல்வி அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள். இவர்கள் முதுநிலை பட்டப்படிப்போடு சேர்த்து, நிச்சயம் பி.எட் என்ற ஆசிரியர்களுக்கான கல்வியல் சார்ந்த படிப்பை முடித்திருக்க வேண்டும். DEO-பணிக்கு பிறகு 2 அல்லது மூன்று ஆண்டுகள் CEO-வாக இருப்பார்கள். அதன் பிறகு JD என்ற இணை இயக்குநர் பொறுப்பு வகித்து, 10, 15ஆண்டுகள் கல்வித் துறையில் நிபுணத்துவம் பெற்ற பின்னரே பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், இப்போது பள்ளிக் கல்வி இயக்குநர் என்ற பதவியே ரத்து செய்யப்பட்டு, இயக்குநர் பணியையும் ஆணையர் பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியே மேற்கொள்வார் என தமிழக அரசு அறிவித்து, பள்ளிக் கல்வித்துறை ஆணையராக டி.என்.பி.எஸ்.சி செயலாளராக இருந்த நந்தகுமார் ஐ.ஏ.எஸ்-சை நியமித்துள்ளது. இதற்குதான் இப்போது ஆசிரியர் சங்கங்கள், நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினரிடமிருந்து எதிர்ப்பும், விமர்சனமும் வந்துள்ளது.
கல்வித்துறையில் அனுபவம் இல்லாத ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியால் எப்படி கள நிலவரத்தை அறிந்துகொண்டு, மாணவர்களை நல்ல முறையில் வளர்தெடுக்கக் கூடிய கல்வி சார்ந்த பணியை மேற்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பும் சங்கங்கள், ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறையில் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி இருக்கும்போது ஆணையர் அந்தஸ்தில் இன்னொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எதற்கு என கேட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜனிடம் கேட்டபோது :-
இந்த கல்வித்துறை என்பது மிக முக்கியமான துறை. மாணவர்களின் உளவியலை அறிந்த, அனுபவம் கொண்ட ஒரு நபர் இயக்குநராக இருப்பதுதான் சரியாக இருக்கும். நிர்வாக பொறுப்பில் இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி துறை சார்ந்து படித்திருக்க மாட்டார். அதேபோல், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து நாம் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும்போது, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியை காலி செய்துவிட்டு, ஐ.ஏ.எஸ் அதிகாரியை ஆணையராக போடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். இன்று நந்தகுமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். நாளை எந்த மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வேண்டுமானாலும் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்படலாம். அவர்கள் நிலைபாடுகள் எல்லாம் மத்திய அரசு Oriented ஆகவே இருக்கும். இது மிகவும் ஆபத்தானது. ஏற்கனவே கல்வித் துறையை நிர்வகிக்க முதன்மை செயலாளர் அந்தஸ்தில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி இருக்கிறார். ஆணையர் பதவியில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி இருக்கிறார். இது இல்லாமல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தில் மேலும் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் என்னவென்றே தெரியாத நிலையில், இயக்குநர் பொறுப்பை தூக்கிவிட்டு அதையும் ஐ.ஏ.எஸ் அதிகாரியே ஆணையராக இருந்து கவனிப்பார் என்றால் இது நியாயம்தானா ?
கல்வித்துறையில் என்று ஆணையர் பணியிடம் ஏற்படுத்தினார்களோ அன்றிலிருந்துதான் குழப்பமும் குளறுபடியும் தொடங்கியது. யாருக்கு எந்த வகையில் அதிகாரம் இருக்கிறது ? யார் என்ன முடிவை எடுப்பது என்றே தெரியாத ஒரு நிலையில் கல்வித் துறை தத்தளித்தற்கு இது முக்கிய காரணமாக இருந்தது. சார் ஒரு எடுத்துக்காடு சொல்றேன், மருத்துவத்துறை செயலாளராக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி இருந்தாலும் மருத்துவத்துறை இயக்குநருக்கும், மருத்துவ கல்லூரி டீனுக்கும்தான் மருத்துவ துறை சார்ந்த புரிதல் ஆழமாக இருக்கும். இவர்கள் மருத்துவத்தையே படித்து நிபுணர் ஆனவர்கள். இங்குபோய் மருத்துவ இயக்குநராக, மருத்துவ கல்லூரி டீனாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க முடியுமா சொல்லுங்க ? அதேதான் சார் கல்வித் துறையிலும்.
இன்று மின்சாரத் துறையில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி பள்ளிக் கல்வித்துறை ஆணையராக ஒரு ரெண்டு வருஷம் இருப்பார், பின்னர் டாஸ்மாக் இயக்குநராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டு கல்வித்துறை ஆணையராக நியமிக்கப்படுவார். இவர்கள் எல்லாம் ஓராண்டு, இரண்டாண்டு இருந்துவிட்டு போய்விடுவார்கள். இவர்கள் கல்வித் துறையை புரிந்துகொள்வதற்கே குறைந்தது 3 ஆண்டுகள் பிடிக்கும். பின்னர் எப்படி திட்டங்களையும், கல்வி சார்ந்த செயல்பாடுகளையும் அவர்கள் முறையாக மேற்கொள்ள முடியும் ?
இந்த நேரம் மிகவும் முக்கியமானது. புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிக்க முயற்சிக்கும் வேளையில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டிய நேரத்தில், தமிழ்நாட்டை சேர்ந்தவர், கல்வித் துறையில் அனுபவம் கொண்டவராக இருக்கும் ஒருவர், இயக்குநராக இருந்தால் மட்டும்தான் இதனை எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும். இப்படி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஆணையராக போட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பதவியை காலி செய்தால், கல்வித்துறை அதளபாதாளத்திற்கு சென்றுவிடும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. எனவே தமிழக அரசு மீண்டும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பதவியை கொண்டு வரவேண்டும் என்று சொல்லி ஆதங்கம் பொங்க முடித்தார் தியாகராஜன்.
தியாகராஜனின் இந்த கருத்திற்கு நேர்மாறாக பதிவிட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பதவி ரத்து செய்யப்பட்டதையும், ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டதையும் வரவேற்றிருக்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி
இதுபற்றி அவரிடமும் கேட்டோம் :-
சார் இவங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியாது. ஒரு தொழில்நுட்ப இயக்ககத்தையே ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் நிர்வகிக்கிறார். அப்படி இருக்கும்போது அறிவும், தெளிவும் கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியால் ஏன் பள்ளிக் கல்வித்துறையை சிறப்பாக செயல்பட வைக்க முடியாது ? ஐ.ஏ.எஸ் அதிகாரி இல்லாத இயக்குநர் ஒரு முடிவு எடுத்தாலும் அதை செயல்படுத்துவதில் ஏகப்பட்ட புரோட்டோகால் இருக்கு சார். ஆனால், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒரு முடிவை எடுத்தால் அதனை உடனே நடைமுறைப்படுத்த எல்லாவிதமான சாத்தியங்களும் இருக்கின்றன. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எளிதாக அமைச்சரையோ முதல்வரையோ சந்திக்க முடியும், துறை சார்ந்த முடிவுகளை எடுத்துக் கூறி அனுமதி பெற முடியும். ஆனால் இயக்குநராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி இல்லாத நபரால் அவ்வளவு எளிதாக இவர்களை அணுகி தனது முடிவை நடைமுறைப்படுத்த முடியாது. இதுதான் எதார்த்தம் இதை நான் நேராக கண்டிருக்கிறேன். நல்லா புரிஞ்சுக்குங்க, ஒரு மாற்றம், சீர்த்திருத்தம் கொண்டுவரும்போது நடைமுறையில் சில சிக்கல்கள் வரத்தான் செய்யும். அதனை பார்த்தால் மாற்றங்களே கொண்டுவர முடியாது. முயற்சி செய்வதில் என்ன தவறு இருக்கிறது. இந்த நடைமுறை பள்ளிக் கல்வித் துறையில் நல்ல மாற்றங்களை கொண்டு வந்தது என்றால் தொடரலாம். இல்லையென்றால் கைவிட்டு விடலாம். ஆனால் இந்த நியமனமே தவறு என்று பொத்தம் பொதுவாக பேசுவதை ஏற்க முடியாது.
புதிய சீர்த்திருத்தம் செய்யும் போது ஆரம்பத்திலேயே ஏன் நாம் எதிர்க்க வேண்டும் ? அறிவும், திறமையும் இருப்பவர்கள்தானே ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக ஆகமுடியும். அப்படிப்பட்டவர்கள் கல்வித் துறையை கவனிக்கவே லாயக்கற்றவர்கள் என்ற கூற்றை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு, தற்போது சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கும் கார்மேகம், பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக இருந்தவர். அவர் அங்கு சிறப்பாக செயல்பட்டதால்தான் அவருக்கு பதவி உயர்வு கொடுத்து கன்ஃபர்டு ஐ.ஏ.எஸ் ஆக்கினார்கள். பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்தவர் ஒரு மாவட்டத்தையே நிர்வகிக்கும் ஆட்சியராக ஆக முடியும் என்றால், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியால் ஏன் பள்ளிக் கல்வித்துறையில் சாதனைகளை, நல்ல பயனுள்ள முடிவுகளை எடுத்து சீர்தூக்கி விட முடியாது ?
எனவே தமிழக அரசுக்கு எடுத்திருக்கும் இந்த முடிவு சரியானதுதான் ; இதனை வரவேற்கிறேன் என்றார்.
ஆனால், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியை நீக்கியது சரியில்லை அதனை ஏற்கமுடியாது என களமிறங்கியிருக்கும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, ஒரு படி மேலே போய் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதமே அனுப்பியிருக்கிறது. இது பற்றி இந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது,
பள்ளி கல்வி ஆணையர் பணியிடம் 2019ல் உருவாக்கப்பட்டபோதே இந்த பணியிடம் தேவையற்றது என்ற கருத்தை எங்கள் சங்கம் தெரிவித்தது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தேவையற்ற பணியிடங்களை நீக்கிவிட்டு, பள்ளிகளில் கூடுதலாக தேவைபடும் ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்கி, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் வழங்கிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு மாறாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இன்று வரை, அடிப்படிஅயில் ஆசிரியர் பயிற்சி பெற்று பல ஆண்டுகள் கல்வித்துறையில் பணியாற்றி, நீண்ட அனுபவம், கல்வியல் செயல்பாடு கொண்டவரையே தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வி இயக்குநர் பணியில் நியமித்துள்ளது. தற்போது ஒன்றிய அரசு ஒட்டுமொத்த கல்வித் துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலும் சூழலில், ஆட்சி பணி அதிகாரி ஒருவரை இயக்குநர் பொறுப்பில் நியமிப்பது என்பது தமிழ்நாட்டின் தனித்தன்மையை இழக்க செய்துவிடும். எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் எதிர்காலத்தில் இப்பணியில் அமர்த்தப்படலாம். அத்தகைய நிலை உருவாக வழி செய்வது நியாமான அணுகுமுறை அல்ல.
அனுபவத்தின் அடிப்படையிலான அனைத்து பதவிகளையும் ஒழித்துவிட்டு, பள்ளிக் கல்வி குறித்து எந்த அனுபவமும் இல்லாத ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் எல்லா அதிகாரங்களையும் ஒப்படைப்பது என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. இயக்குநர் பணி நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தேவையற்ற விவாதமாக மாறி கல்வியை மாநில பட்டியலுக்கு திரும்ப வர வேண்டும் என்ற நமது அடிப்படை கோரிக்கை திசை மாற தமிழக அரசு அனுமதித்து விடக்கூடாது. எனவே பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடத்தை ரத்து செய்து, கல்வித் துறை சார்ந்த அதிகாரியை இயக்குநராக நியமிக்கும் பழைய முறையை தொடர முதல்வர் உத்தரவிட வேண்டும் என்றார்.
எது எப்படியோ, கல்வி தான் அனைவருக்கும் ஆதாரம். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையிலான எந்த முடிவையும் தமிழக அரசு மறந்தும் கூட மேற்கொண்டுவிடக் கூடாது என்பதுதான் பெற்றோர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது.