Tamil Nadu Covid-19 Updates: தீவிர சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு; சென்னையில் ஆக்சிஜன் படுக்கைகள் ‛ஹவுஸ்புல்’
சென்னையில் தீவிர சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால் படுக்கை வசதியில்லாமல் தீவிர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21,238 பேர் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக சென்னையில் 6,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 230 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 33 ஆயிரத்து 222 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேசான கொரோனா பாதிப்புடைய ஒருவர் தனது மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கோவிட் பராமரிப்பு மையங்களில் தங்கியும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சைப் பெறலாம். அதேபோன்று, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைதல், சுவாசிப்பதில் பிரச்சனை போன்ற தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு மற்றும் தனியார் கோவிட்- மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை படுக்கைகளில் அனுமதி பெற்று சிகிச்சைப் பெற வேண்டும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கும்போதே மருத்துவமனைக்குச் சென்று விட்டால் தீவிர நோய் நிலைமை ஏற்படுவதைத் தவிர்த்து விடலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், சென்னை அரசு மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை படுக்கைகள் அனைத்திலும் தற்போது நோயாளிகள் அனுமதிக்கப்படுத்ளனர். இதனால், புது நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
tncovidbeds.tnega.org என்ற அரசு போர்டலின் படி, சென்னையிலுள்ள ஐந்து அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக 919 தீவிர சிகிச்சை படுக்கைகள் தயார் செய்யப்பட்டது.
கிண்டி அரசு கொரோனா மருத்துவமனையில் 102 தீவிர சிகிச்சை படுக்கைகளும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமையில் 92 தீவிர சிகிச்சை படுக்கைகளும், சென்னை மருத்துவக் கல்லூரியில் 385 தீவிர சிகிச்சை படுக்கைகளும், ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் 190 தீவிர படுக்கை வசதியும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 150 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளையும் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.
மேலும், மேற்கூறிய ஐந்து அரசு பொது மருத்துவமனைகளில் வெறும் 8 ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கைகள் மாட்டுமே காலியாக உள்ளன.
கிண்டி கொரோனா மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 198 ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கைகளில் 1 மட்டுமே காலியாக உள்ளது. கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் உள்ள அனைத்து (168) ஆக்சிஜன் படுக்கைகளிலும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள 657 ஆக்ஸிஜன் படுக்கைகளில் 4 மட்டுமே காலியாக உள்ளன. ஓமந்தூர் அரசு மருத்துவமையில் உள்ள அனைத்து ஆக்ஸிஜன் படுக்கைகளிலும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள 600 ஆக்சிஜன் உதவி கொண்ட படுகைகளில் 3 மட்டுமே காலியாக உள்ளன.
அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து குணமடையும் நோயாளிகளை விட, தீவிர சிகிச்சைப் பிரிவில் புதிதாக அனுமதி கோரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இதற்கு முக்கிய காரணமாகும்.
சென்னையில் உள்ள பெரும்பாலான தனியார் கோவிட் மருத்துவமனைகள் மற்றும் அரசு கோவிட் பராமரிப்பு மையங்கள் லேசான அல்லது மிதமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் உள்ளன. பெரிய அளவிலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் ஆக்ஸிஜன் படுக்கை கொண்ட படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அடித்தட்டு மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது இயலாத காரியம் என்பதை புரிந்து கொள்வது முக்கியமாகும்.
tncovidbeds :
இதன் காரணமாக, தமிழகத்தில் தேவையான மருத்துவ உட்கட்டமைப்புகளை மாநில அரசு தயார் செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, தமிழக சுகாதாரத்துறை tncovidbeds.tnega.org என்ற இணையதள போர்ட்டலை நிர்வகித்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கோவிட் பயன்பாட்டிற்கு உள்ள காலி படுக்கைகளின் விவரங்களை tncovidbeds வலைதளத்தில் அந்தந்த மருத்துவமனைகள் பதிவேற்றம் செய்து வருகின்றன.
எனினும், சிகிச்சை பெறுவோரின் சேர்க்கைகள் மற்றும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையின் மாறும் தன்மை காரணமாக படுக்கைகளின் இருப்புநிலை அவ்வப்போதான மாற்றத்திற்குட்பட்டது.
காலிபடுக்கைகளின் சமீபத்திய விவரத்தினை அறிய சம்பந்தப்பட்ட மருத்துவமனையை தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், காலிபடுக்கைகளின் விவரம் பதிவேற்றம் தொடர்பான தேதி மற்றும் நேரம் ஒவ்வொரு மருத்துவமனைகளின் பெயருக்குக் கீழும் குறிப்பிடப்பட்டுள்ளது