TN Corona Virus Update: கேரளாவில் ஊரடங்கு 9-ஆம் தேதி வரை நீட்டிப்பு
Covid-19 Live: தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக, தற்போதுள்ள முழு ஊரடங்கு ஜூன் 07ம் தேதி காலை 6-00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறும்.
உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் மளிகைப் பொருட்கள் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
கேரளாவில் ஊரடங்கு 9-ந் தேதி வரை நீட்டிப்பு
கேரளாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 16.59 சதவீதமாக பதிவாகி உள்ளது. இருப்பினும், கொரோன பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, அந்த மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கை வரும் 9-ந் தேதி வரை நீட்டித்துள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 30 ஆயிரமாக குறைந்தது கொரோனா தினசரி பாதிப்பு
தமிழகத்தில் இன்று 30 ஆயிரத்து 16 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 680 ஆகும். தமிழ்நாட்டில் இன்றும் கொரோனா தொற்று காரணமாக 486 நபர்கள் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் கொரோனாவே இல்லாத 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள்
நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மலைக்கிராமங்களில் இதுவரை கொரோனா வைரசின் தாக்கம் துளியளவும் கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த வரிசையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கட்டாக் மாவட்டம். இந்த மாவட்டத்தில் சுமார் 1028 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் ஒரு கிராமத்தில் கூட, இதுவரை கொரோனா வைரசின் பாதிப்பு பதிவாகவில்லை. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த கிராமங்களை பச்சை மண்டலங்களாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் குறித்து கிராமத் தலைவர்கள், உறுப்பினர்கள், சுகாதாரத்துறையினர் தீவிர விழிப்புணர்வை கிராம மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.
84.5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்தில் செலுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வுப்பணிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
“ திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள், கொரோனா பரிசோதனை மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் படுக்கைகள் வசதி கொண்ட மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
மேலும், சென்னையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கார் ஆம்புலன்ஸ் சேவையையும் திருப்பூரில் தொடங்கி வைக்கிறார். இந்த ஆம்புலன்ஸ் மூலமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், ஆய்வகங்களுக்கு அழைத்துச் செல்லவும் பயன்படுத்தப்படும்.
திருப்பூரில் ஆயிரம் படுக்கைகள் அளவுக்கு காலியாக உள்ளதாகல் பதற்றம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. திருப்பூரில் 2.12 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள 16 ஆயிரம் தடுப்பூசிகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் செலுத்தப்படும்.
தமிழகத்திற்கு வந்துள்ள 95.5. லட்சம் தடுப்பூசிகளில் தற்போது வரையில் 84.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 6 லட்சம் தடுப்பூசிகளும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 லட்சம் தடுப்பூசிகளும் செலுத்துவதற்காக கையிருப்பில் உள்ளது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் வரும் 2 அல்லது 3 நாட்களில் மக்களுக்கு செலுத்தப்படும்.
இதுதவிர, தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்க உலகளவிலான ஒப்பந்தம் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில், ஒப்பந்தப் படிவங்களை ஜூன் 4-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவும், ஜூன் 5-ந் தேதி எந்த நிறுவனம் என்பது முடிவு செய்யப்பட்டு 6 மாதத்திற்குள் 3.5 கோடி தடுப்பூசிகளை அவர்கள் வழங்க வேண்டும் என்று விதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ரூபாய் 85 கோடி செலுத்தி 23.5 லட்சம தடுப்பூசியை பெறும் பணியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுதவிர, கூடுதலாக மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசியை பெறுவதற்காக முதல்வரின் உத்தரவின்பேரில் டி.ஆர்.பாலு எம்.பி. ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லியிலே தங்கி உள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் ஆக்சிஜன் கையிருப்பு போதிய அளவிலே உள்ளது. முதல்வர் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக ஆக்சிஜன் கையிருப்பு தற்போது 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விதிகளை மீறிச் செயல்படும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தாக்கத்தைப் போல, புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை தாக்கம் தீவிரமாக காணப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அந்த மாநில சுகாதாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ புதுச்சேரி மாநிலத்தில் புதியதாக 9 ஆயிரத்து 118 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், புதுச்சேரியில் 788 நபர்களுக்கும், காரைக்காலில் 138 நபர்களுக்கும், ஏனாமில் 34 நபர்களுக்கும், மாஹேவில் 36 நபர்களுக்கும் என மொத்தம் 996 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 16 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் ஒருவர் என 21 பேர் புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் ஆண்கள் ஆவர். 9 பேர் பெண்கள் ஆவர். இன்று 21 பேர் உயிரிழந்ததன் மூலம் அந்த மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு காரணமாக 1,497 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் கொரோனா இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 896 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இன்று வரை மருத்துவமனைகளில் மட்டும் 1,694 நபர்களும், வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 11 ஆயிரத்து 459 பேரும் என மொத்தமாக 13 ஆயிரத்து 153 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதியதாக 1,718 நபர்கள் கொரோனா சிகிச்சை முடிந்து குணம் அடைந்து இன்று வீடு திரும்பினர். இதனால், மாநிலத்தில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துள்ளது. இதனால், புதுச்சேரியில் கொரோனாவால் குணம் அடைவோர் விகிதம் 85.76 சதவீமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் 10 லட்சத்து 34 ஆயிரத்து 12 கொரோனா பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்றறில் 8 லட்சத்து 96 ஆயிரத்து 432 பரிசோதனைகளின் முடிவுகள் நெகடிவ் என்று வந்துள்ளது.
அந்த மாநிலத்தில் மட்டும் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 428 நபர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கின் காரணமாகவே புதுச்சேரியில் கடந்த வாரம் ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு, தற்போது ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி உள்ளது. மேலும், உயிரிழப்பு பாதிப்பும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.