CM MK Stalin Letter: சிறைப்பிடித்த மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்..
தமிழ்நாட்டை சேர்ந்த 27 மீனவர்களை விடுவித்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
![CM MK Stalin Letter: சிறைப்பிடித்த மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்.. Tamil Nadu Chief Minister M.K. urged to release 27 fishermen from Tamil Nadu. Stalin has written to the Union Minister of External Affairs. CM MK Stalin Letter: சிறைப்பிடித்த மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/3027c16926d85896bef3e5ad0b0be0a01697441736317589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது ஐந்து மீன்பிடிப் படகுகளை விடுவித்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (16-10-2023) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் இருவேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 14.10.2023 அன்று IND-TN-MM-237, IND-TN-10-MM-970, IND-TN-10-MM-56 மற்றும் IND-TN-10-MM-708 ஆகிய பதிவு எண்கள் கொண்ட 4 மீன்பிடிப் படகுகளில் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களும், மற்றொரு சம்பவத்தில் IND-TN-11-MM-726 பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஏற்கனவே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, தொடர்ச்சியாக இதுபோன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்கள் கைது செய்யப்படுவதால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் இதுபோன்ற சம்பவங்களால் மீனவ சமுதாயக் குடும்பத்தினருக்குப் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதோடு இத்தொழிலை நம்பியுள்ள எண்ணற்ற குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, உடனடியாக தூதரக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)