கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
மிழகத்தில் எந்த ஜாதி பெயரையும் சொல்லியும் யாரையும் இழிவு படுத்திவிட முடியாது. ஆனால், 'பார்ப்பான்' என்ற பெயரை சொல்லி கேலி, கிண்டல் செய்து வருகின்றனர் என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
அம்பேத்கரால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 'ஆரிய - திராவிட' இனவாத கோட்பாட்டை சொல்லி எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரிக்கு பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, "கி.மு. 3000-ம் ஆண்டில் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் தங்கள் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் இடம் தேடி கைபர் போலன் கணவாய் வழியே உள்ளே நுழைந்தனர்.
"பழைய பல்லவியை மீண்டும் பாடிய ஆ. ராசா"
கொஞ்ச காலத்தில் பிராமணர்கள் மதத் தலைமையைக் கைப்பற்றினார்கள். அவர்களின் மனுதர்மம் வடக்கே உள்ள வாழ்வியல் முறையை வகுத்துத் தந்தது. பிறப்பால் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று மக்கள் பிரிக்கப்பட்டனர்" என்று நீதி கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் பாடிவரும் பழைய பல்லவியை மீண்டும் பாடியிருக்கிறார்.
இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களை மதம் மாற்றுவதற்காக, ராபர்ட் கால்டுவெல் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் உருவாக்கிய கற்பனை கதை தான் ஆரிய - திராவிட இனவாதம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர், ஆரிய - திராவிட இனவாத கோட்பாட்டிற்கு சரியான இடம் குப்பை தொட்டிதான் என்று கூறியிருக்கிறார்.
இதை வசதியாக மறைத்துவிட்டு ஆ. ராசா போன்றவர்கள் ஆரிய - திராவிட இனவாத கோட்பாட்டை மீண்டும் மீண்டும் சொல்லி தமிழ்நாட்டில் இனவாத அரசியலை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக பாஜக பரபரப்பு அறிக்கை:
ஆனால், மொழி வெறியையும், இனவெறியையும் தூண்டி, குடும்ப அரசியல் நடத்திவரும் சில கட்சிகள், இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் அடைந்து வருகின்றன. இந்துக்களில் ஒரு பிரிவினரின் வாக்குகளையும், சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைக்கும் இக்காட்சிகள், இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகின்றன. இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் நீடிப்பதற்கு இது போன்ற கட்சிகளின் சுயநல சூழ்ச்சி அரசியலே காரணம்.
இன்று தமிழகத்தில் எந்த ஜாதி பெயரையும் சொல்லியும் யாரையும் இழிவு படுத்திவிட முடியாது. ஆனால், பிராமணர்களை, அவர்கள் இழிவு சொல்லாக கருதும் 'பார்ப்பான்' என்ற பெயரை சொல்லியும், அவர்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு மொழியையு கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
மக்களின் கவனத்தை திசைதிருப்ப, மீண்டும் 'இனவாத அரசியலை' திமுக கையில் எடுத்திருக்கிறது இதைத்தான் ஆ.ராசா அவர்களின் அறிக்கை வெளிப்படுத்துகிறது. பிறப்பின் அடிப்படையில் இந்து மதத்தில் வேறுபாடுகள் இருப்பதாகவும், அதை பிராமணர்கள் ஏற்படுத்தியதாகவும் ஆகும் ஆ. ராசா கூறுகிறார். 'அனைவரும் சமம், சமத்துவம். என்பது தான் திமுகவின் கொள்கை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இது உண்மையானால் 'திமுக தலைமை' என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? ஆ.ராசா போன்ற திறமையும், அனுபவமும் வாய்ந்த தலைவர்கள் திமுக தலைவராக, முதல்வராக முடியுமா? பெரம்பலூர் பொது தொகுதி ஆன பிறகு, ஆ ராசா, நீலகிரி தனித் தொகுதியில் போட்டியிடும் சூழல் ஏன் உருவானது? ஆ.ராசா போன்ற முக்கிய தலைவர்களையே பொதுத் தொகுதியில் நிறுத்த முடியாத அளவுக்கு திமுகவில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறதா?
பிறப்பின் அடிப்படையில் திமுக தலைமை நிரப்பப்படுவது பற்றி ஆராசாவின் கருத்து என்ன? இது பிறப்பின் அடிப்படையிலான தீண்டாமை இல்லையா? இதை நவீன மனுதர்மம் அல்லது திராவிட மனு தர்மம் என்று கூறலாமா? பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தியும், அதை துளியும் மதிக்காமல் தங்களின் மூன்றாம் தலைமுறை வாரிசான உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கி இருக்கிறது திமுக தலைமை.
'தந்தை - மகன் - பேரன்' என்று கட்சி தலைமைக்கு பிறப்பின் அடிப்படையில் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு கட்சியில் இருந்து கொண்டு மனுதர்மம் பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். வேதனைப்பட வேண்டும். மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். திமுகவின் இனவாத அரசியல் இனி எடுபடாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.