Vishal Meet MK Stalin: நடிகர் விஷால் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் விஷால் வாழ்த்து கூறினார்.
தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ராஜ்பவனில் எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து, அனைவரும் ஆளுநருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறினர். நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார்.
இதனிடையே, தலைமைச் செயலகத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000, மகளிருக்கு சாதாரண நகரப் பேருந்தில் இலவசம் பயணம் என்பன உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அவரது பணிகளுக்கும் இடையேயும் பலர் முதல்வருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலினை நடிகர் விஷால் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
பின்னர் இதுகுறித்து விஷால் கூறுகையில், “முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னேன். அத்துடன் நடிகர் சங்கத்தின் இன்றைய நிலைமையும் எடுத்து கூறினேன். இதனால் எத்தனை கலைஞர்கள் பென்ஷன் கிடைக்காமல், மருந்து வாங்க கூட முடியாமல் கஷ்டபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றியும் விளக்கினேன். இன்றைய சூழலில் கொரோனாவில் இருந்து முதலில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு , கண்டிப்பாக அதற்கான ஆவணத்தை செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்.அத்துடன் கவனமாக இருக்கவும் என்னை அறிவுறுத்தினார். அத்தோடு முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து வாழ்த்துக் கூறினேன்’ என்று கூறினார்.