Perarivalan Case : அடுக்கடுக்காக முன் வைக்கப்பட்ட விமர்சனங்கள்... பேரறிவாளனுக்கு எதிராக மத்திய அரசு எய்த அஸ்திரங்கள் இதோ!
பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகளைப் பார்க்கலாம்..
முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவந்த பேரறிவாளன் கடந்த மார்ச் 9ம் தேதி ஜாமீனின் விடுவிக்கப்பட்டார். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 2016ல் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு கடந்த ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
அப்போது, பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தமிழ்நாடு அரசின் சார்பில் ராகேஷ் துவிவேதி, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
விசாரணையின் போது "பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைத்தும் ஆளுநர் இதுதொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை. 32 ஆண்டுகால சிறை வாழ்க்கையில் பேரறிவாளன் நன்னடத்தையுடனும், முன்மாதிரி நபராகவும் செயல்பட்டுள்ளார். எனவே, அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வலியுறுத்தினார்.
இதையடுத்து நீதிபதிகள், "பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்து வைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம். யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்திற்கிடையில் பேரறிவாளன் ஏன் சிக்கிக்கொள்ள வேண்டும்? அவரை உச்சநீதிமன்றமே ஏன் விடுதலை செய்யக்கூடாது?" என்று ராகேஷ் துவிவேதியிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ராகேஷ் துவிவேதி, "இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கான உரிய அதிகாரம் கொண்ட அரசு எது என்பதுதான் இங்கு சர்ச்சையாக உள்ளது. அரசமைப்புச் சட்ட விஷயங்கள் சம்பந்தப்பட்டிருந்தால், சில காரணங்களுக்காக, அவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படலாம், ஆனால் மீண்டும் மசோதாக்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படும்" என தெரிவித்தார்.
"தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்" என்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் தெரிவித்தார்.
"இதுகுறித்து ஆளுநர் முடிவு எடுக்காமல், எந்த விதியின் அடிப்படையில் ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார்?" என நீதிபதிகள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
``பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்குத் தான் அதிகாரம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆளுநர் செயல்படும் விதம் குறித்து கூட ஜனாதிபதியே தான் முடிவெடுக்க முடியும். அரசியல் சாசன பிரிவு 72-ம் இதைத்தான் மிகத் தெளிவாகக் கூறுகிறது” என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நட்ராஜ் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி தவாய், நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் இந்தியாவில் உள்ள எல்லா கொலைக் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவெடுப்பார் என்பது போல் உள்ளது. தனக்கு தேவையான விஷயத்தை குடியரசுத் தலைவர் மூலம் சாதித்துக்கொள்வது போல் இருக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக தான் போய் முடியும் இந்த நாடு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றார். இதே கருத்தையே நீதிபதி நாகேஷ்வர் ராவும் கூறினார்.
அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப் பெரிய பாதகமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மேலும், மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? ஆளுநர் இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக, எத்தனை முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆளுநர் அமைச்சரவையின் முடிவில் மகிழ்ச்சியடையவில்லை என்றால், அவர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார். இது அரசியலமைப்பின் கூட்டாட்சித் தன்மையை அழித்துவிடும்" எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
பின்னர், இந்த வழக்கு மே4ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, , பேரறிவாளன் விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டியது தானே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் நடராஜன், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டு நடப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு செயல்படுங்கள் என்று ஆளுநருக்கு யாரும் அழுத்தம் தரமுடியாது இது மத்திய புலனாய்வு கையாண்ட விவகாரம். இதில் கருணை காட்ட வேண்டும் என்றாலோ முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலோ அது மத்திய அரசின் வசம் தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுப்பார். தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதன்படி தான் நடக்கும் என்று வாதிட்டார்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக இதுவரை ஏன் முடிவெடுக்கவில்லை. முடிவெடுக்க ஏன் கால தாமதம் ஏற்படுகிறது? பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்கும் பிரச்சனையில் ஏன் மத்திய அரசு தலையிருகிறது? குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த ஆவணங்கள் எங்கே? பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பல இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறோம். அதன் நிலமை என்ன? விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இருக்கும்போது ஆளுநர் ஏன் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்? என்று சரமாரியாக கேள்வியெழுப்பிய நீதிபதிகள், அரசமைப்புச் சட்டம், கூட்டாட்சி தத்துவம் தொடர்புடைய அதிமுக்கிய விஷயமாக இந்த வழக்கை கருதுகிறோம். மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்று மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம் என்று கூறினர்.
மேலும், பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு அக்கறைக் காட்டவில்லை என்று குற்றம்சாட்டிய நீதிபதிகள் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நிலை, அதிகாரப் பிரச்சனையை கருத்தில் கொண்டு பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர். மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியதோடு, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கானது மே 11ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆளுநர் சார்பில் மத்திய அரசு ஆஜராகுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளியுங்கள். ஆளுநருக்காக மாநில அரசு வாதிட வேண்டுமே தவிர ஒன்றிய அரசு வாதிடக் கூடாது என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.
பேரறிவாளன் மனு மீது ஆளுநர் முடிவெடுப்பார் என்றும், மாநில அரசின் முடிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கும்போது ஆளுநர் குடியரசுத் தலைவரிடம் முறையிடலாம் மத்திய அரசு வழக்கறிஞர் நடராஜ் வாதிட்டார்.
பேரறிவாளன் மனு மீது உத்தரவு பிறப்பிக்க ஆளுநர் தொடக்கத்தில் மறுத்துவிட்டார். அதன்பின் 2 அல்லது 3 ஆண்டுகளாக முடிவெடுக்கவில்லை; ஆளுநர் முடிவெடுக்காமல் பல ஆண்டுகள் காலம் தாழ்த்தியது தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்? விடுதலை தொடர்பாக நாங்கள் முடிவெடுக்க முடிவு செய்தபோது குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளீர்கள். கிரிமினல் வழக்குகளில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசு கூறுவது போல் உள்ளது. ஆளுநர் முடிவு மாநில அரசின் முடிவுக்குள் வருகிறது; குற்றவாளிகளுக்கான கருணை அல்லது நிவாரணம் வழங்குவது மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஐபிசியின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான கருணை மனுக்கள் மீது ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தரப்பு கூற, அப்படியானால் 70 ஆண்டுகளாக ஆளுநர் அளித்த தண்டனைக் குறைப்பு, அரசியல் சட்டத்திற்கு எதிரானதா? ஆயிரக்கணக்கான உத்தரவுகளை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு எண்ணுகிறதா? என்று நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியதோடு, இந்த வழக்கின் இறுதி வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பின் தேதியை குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளது.