CM MK Stalin: "சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் சுட்டிக்காட்டுவதுதான் பத்திரிகை தர்மம்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
CM MK Stalin: கலைஞர் பத்திரிகையாளராக, அரசியல்வாதியாக, சினிமா வசனகர்த்தாவாக, முதலமைச்சராக, நாடக நடிகராக திகழ்ந்துள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
CM MK Stalin: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி குறித்து தனியார் ஊடகம் கலைஞர் 100 என்ற தலைப்பில் புத்தகம் வெளியீட்டு விழா நடத்தியது. அதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "பத்திரிகையாளர்கள் அனைவரும் கலைஞரைக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. கலைஞர் பத்திரிகையாளராக, அரசியல்வாதியாக, சினிமா வசனகர்த்தாவாக, முதலமைச்சராக, நாடக நடிகராக திகழ்ந்துள்ளார்.
ஆதரிப்பதும், விமர்சிப்பதும்:
பொதுவாகவே ஊடகங்கள், ஒரு ஆட்சி கொண்டுவரும் நல்ல திட்டங்களை மனப்பூர்வமாக ஆதரித்து எழுதுங்கள். அப்படி எழுதும்போதுதான், நீங்கள் விமர்சிக்கும்போது உங்கள் விமர்சனங்களுக்கு மதிப்பு இருக்கும். எப்போதும் விமர்சித்து மட்டுமே எழுதினால் அந்த விமர்சங்களுக்கு மதிப்பு இருக்காது. சரியானதை ஆதரிப்பதும், விமர்சங்களைச் சுட்டிக்காட்டுவதும்தான் நடுநிலை பத்திரிகைக்கு இருக்கும் தர்மம். அதன்படி தமிழ்நாடு பத்திரிகைகள் செயல்படவேண்டும் என மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக அல்ல, நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக, சமுதாயத்திற்காக, இந்த நிலத்திற்காக.
ஏனென்றால் இன்று ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவை நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. அரசியல் ரீதியாக வரும் நெருக்கடியை நாங்கள் எதிர்கொண்டு தடுப்போம். ஆனால் அதுமட்டும் போதாது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களும் தங்களின் கடமையைச் செய்ய வேண்டும். இந்தியாவின் விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலை போராட்டங்கள் குறித்து, அன்றைய பல பத்திரிகைகள் ஆதரவு தெரிவித்து தலையங்கங்களை எழுதியது.
உச்சநீதிமன்றம் மட்டும் இல்லாமல் தேர்தல் ஆணையம் தொடங்கி அரசியல் சட்ட அமைப்புகள் அனைத்தும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இந்த காலகட்டத்தில் ஜனநாயகம் காப்பதற்காகவும், அதன் மூலமாக இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமை நான்காவது தூண் ஆன பத்திரிகைக்கு உள்ளது” என குறிப்பிட்டு பேசினார்.
கமல்ஹாசன்:
இதற்கு முன்னதாக பேசிய நடிகர் கமல் ஹாசன், “எக்ஸ்பிரஸ் வேகத்தில் திரைக்கதை எழுதுவார் என சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். கலைவாணர் வீட்டில் கலைமகள் படத்துக்காக கலைஞர் வசனம் எழுதியபோது காகிதம் பறக்குமாம். கலைவாணர் அவற்றை எடுத்து குவித்து வைப்பாராம். இல்லற ஜோதி படத்தில் அனார்கலி எனும் வசனம் வரும், அதற்கே தனியாக போஸ்டர் போடும் வகையில் அது அவ்வளவு பாப்புலரானது.
இல்லற ஜோதி பட வசனத்துக்கும் எனக்கும் ஒரே வயசு. 1954ஆம் ஆண்டு அதனை எழுதி இருப்பார். அனார் அனார் மறைந்து விட்டாயா.. என் மாசற்ற ஜோதியே.. என் கண்ணில் படாத உன் அழகை கல்லறைக்குள் மறைத்து விட்டார்களா...” என கலைஞர் கருணாநிதியின் வசனத்தை கடகடவென பேசி அங்கிருந்தோரை ஆச்சர்யப்படுத்தி கைத்தட்டல்களைப் பெற்ற கமல், “நான் இப்போது பேச வேண்டியதை பேப்பரில் எழுதி கொண்டு வந்துள்ளேன். ஆனால் 69 ஆண்டுகளுக்கு முன் அவர் பேசிய வசனம் நியாபகத்தில் உள்ளது. அவர் வசனத்தை யாராவது மறந்துட்டா எடுத்துக் கொடுக்கமளவுக்கு எனக்கு தெரியும். என்ன மாதிரி பல நடிகர்கள், அவர்களுக்கு எல்லாம் இவர் தான் கேட் பாஸ்.. நடிக்க வறீங்களா.. எங்க கலைஞர் வசனத்த சொல்லுங்க பாக்கலாம் என்பார்கள். வாய் சுத்தமாக உள்ளதா என்பதை இவர் வசனத்தை வைத்து தான் பார்ப்பார்கள்.
இப்படிப்பட்ட மாபெரும் எழுத்தாளருக்கு நான் சினிமா எழுத ஆரம்பித்த பிறகு என் கதைகளை விவாதிப்பதும், அதனை எடுத்துச் செல்வதுமாக இருந்தேன். எனக்கு தொடர்ந்து அவர் ஆசிரியராகவே இருந்தார். அவருக்கு இத்தாலி சென்று வந்தபோது, இத்தாலிய எரிமலைக் குழம்பில் செய்த பேனாவை பரிசளித்தேன்.
அந்தப் பேனாவை யாராவது அவருக்கு முன்னாடியே கொடுத்திருந்தால், பராசக்தி போல் இன்னும் பல படங்கள் பறந்திருக்கும். சரியான கைகளில் அந்தப் பேனாவை கொண்டு சேர்த்த பெருமை எனக்கு உண்டு” எனப் பேசியுள்ளார்.