கொட்டும் மழை... வரத்து குறைவு... ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை!
வரும் நாட்களில் மழை குறைந்து, தக்காளி வரத்து அதிகரித்தால் விலை குறையும் என்று தக்காளி வியாபாரி ஒருவர் கூறினார்.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்து வருவதால், ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி மார்க்கெட்டில் வரத்தாகும் காய்கறிகளை மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதி மக்களும், மளிகை கடை வியாபாரிகளும் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல்வார்கள். இந்த மாவட்டம் மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி மற்றும் இதர காய்கறிகள் வரத்து குறைய துவங்கியுள்ளது. நேற்று வரத்து குறைவால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
“ஈரோடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, கிருஷ்ணகிரி, தர்மபுரி, பகுதியில் இருந்து 6 முதல் 8 லோடும், தாளவாடி உட்பட ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து 2 முதல் 3 லோடு மேல் தக்காளி வரத்தாகும். தக்காளி வரத்தாகும் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நிறைய டன் தாக்காளி வீணாகிப்போனது. கடந்த வாரம் 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.550 முதல் ரூ.600க்கும், 25 கிலோ தக்காளி பெட்டி ரூ.800 முதல் ரூ.900 வரையும் விற்பனையானது. தக்காளி வரத்து மேலும் குறைந்ததால் நேற்று 14 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.900 முதல் ரூ.1,200 வரையும், 25 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.1,400 முதல் ரூ.1,600 வரையும் மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. வரும் நாட்களில் மழை குறைந்து, தக்காளி வரத்து அதிகரித்தால் விலை குறையும்” என்று தக்காளி வியாபாரி ஒருவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்