கோவையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை
காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் ஸ்வேதாவிற்கும், யோகேஸ்வரனுக்கு நட்பு இருந்து வந்துள்ளதை கண்டித்ததால் மனம் உடைந்த ஸ்வேதா தற்கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டயம் பாளையத்தில் வாரி மெடிக்கல் அகடமி என்ற பெயரில் நீட் தேர்வுக்கான கோச்சிங் சென்டர் கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் பொறுப்பு முதல்வராக பிரகாஷ் என்பவரும், முதல்வராக சுகுமார் என்பவர் இருந்து வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில் 65 மாணவிகள் உட்பட 130 பேர் பயின்று வருகின்றனர். இம்மையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்வேதா (18) என்பவர் சேர்ந்து, பயிற்சி மையத்தின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவருடன் திருச்சியை சேர்ந்த பிரியங்கா மற்றும் கரூரை சேர்ந்த காவ்யா ஆகியோர் ஒரே அறையில் தங்கி படித்து வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் மதுரையை சேர்ந்த யோகேஸ்வரன் (18) என்பவரும் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்வேதாவிற்கும், யோகேஸ்வரன் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர்கள் பழகி வருவது தெரிந்து ஸ்வேதா மற்றும் யோகேஸ்வரன் இருவரையும் பெற்றோர்கள் பேசக்கூடாது என கண்டித்துள்ளனர்.
அதன் பின்பு யோகேஸ்வரனை கடந்த ஜனவரி மாதத்தில் அந்த பயிற்சி மையத்திற்கு சென்று படிக்க வேண்டாம் என அவரது பெற்றோர் நிறுத்தி சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று படிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை முதல் ஸ்வேதா உடல் நிலை சரியில்லாமல் பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பிரியங்கா, காவ்யா ஆகிய இருவரும் நீட் வகுப்பிற்கு சென்றுள்ளனர். பின்பு வகுப்பு முடிந்து பிரியங்கா ஸ்வேதாவிற்கு மெஸ்ஸில் இருந்து உணவு வாங்கி வந்து பார்த்த போது, அறை உட் பக்கமாக பூட்டி இருந்துள்ளது. பின்னர் திரும்பி ஜன்னல் வழியில் பார்த்த பொழுது ஸ்வேதா தனக்குத் தானே மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் பிரியங்கா வார்டனுக்கு தகவல் சொல்லி அவர்கள் மூலம் கதவை உடைத்து, ஸ்வேதாவை மீட்டு குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்வேதா மருத்துவமனைக்கு வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் ஸ்வேதாவிற்கும், யோகேஸ்வரனுக்கு பழக்கம் இருந்து வந்துள்ளதை கண்டித்ததால் மனம் உடைந்த ஸ்வேதா தற்கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஸ்வேதாவின் உடலை காவல் துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கோவில்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.