வெல்டருக்குள் ஒரு விஞ்ஞானி..! கட்டிலில் கழிப்பறை செய்த கன்னியாகுமரி வெல்டர்! குவியும் விருது!
கன்னியாகுமரியைச் சேர்ந்த வெல்டர் நோயாளிகளுக்காக கழிப்பறை வசதியுடன் கூடிய கட்டிலை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே எறும்புக்காடையைச் சேர்ந்தவர் சரவணமுத்து. 44 வயதான அவர் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர் சிறுவயதிலிருந்து கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். கடந்த 18 ஆண்டுகளாக வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். வெடிங் பட்டறையில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது அவர் சில வித்தியாசமான தானியங்கி பொருட்களை உருவாக்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஒரு நாள் சரவணமுத்துவின் மனைவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் அவருக்கு கர்பப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சரவணமுத்துவின் மனைவிக்கு கழிப்பறை செல்ல மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டு வேதனையுற்ற சரவணமுத்து, இதுபோன்ற படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு செய்யவேண்டுமென நினைத்துள்ளார். தனது மனைவி படும் துயரம் காணாது அவர் உருவாக்கியதுதான் இந்த கழிப்பறை படுக்கை. கடந்த 2016 ஆம் ஆண்டு இதனை தயார் செய்ய துவங்கிய அவர் இதுவரை 16 க்கு மேற்பட்ட படுக்கைகள் செய்துள்ளார்.
படுக்கையில் இருக்கும் நோயாளிகள் பிறருடைய துணையின்றி அந்தப் படுக்கையிலேயே மல, ஜலம் கழிக்கவும், அதனை தானே சுத்தம் செய்யவும் இயந்திரங்களை பொருத்தி சாதனை படைத்துள்ளார். இந்த கட்டிலை தயார் செய்ய குறைந்தது
இரண்டு மாதங்கள் வரை ஆகிறது. இவர் இதுபோன்று வித்தியாசமான முறையில் தானியங்கி படுக்கை மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய கட்டில்களை தயார் செய்து வருவதற்காக 2019 ஆண்டு ஜனாதிபதியிடம் இருந்து சிறந்த படைப்பிற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் இந்திய விண்வெளி மையம், அண்ணா பல்கலைகழகம், ஜிப்மர் மருத்துவமனை உட்பட பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 17 விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சரவணமுத்து கூறும்போது, "நான் முதன்முதலில் குறைந்த எரிபொருள் கொண்டு இயங்கும் இன்ஜினை தயாரிக்க முயற்சி செய்து வந்தேன். ஆனால், அதில் தொடர்ந்து தோல்வி ஏற்படவே நீண்ட நாட்களாக விரக்தியில் இருந்தேன். அப்போதுதான் எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. பின்பு, அவள் பட்ட வேதனையை வேறு யாரும் படக்கூடாது என எண்ணி, இந்த கண்டுபிடிப்பை உருவாக்கினேன். ஆரம்ப காலகட்டத்தில் நான் செய்த பல அறிவியல் கண்டுபிடிப்புகளை புராஜெக்ட் என்ற பெயரில் பலரும் எடுத்துச் சென்று அதனை காப்புரிமை பெற்று பெரிய அளவில் முன்னுக்கு வந்துள்ளனர். தற்போது இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமை என்னிடம் உள்ளது. இதனை சந்தைப்படுத்த அரசு உதவி செய்ய வேண்டும். சுமார் 60,000 முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான பலதரப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய படுக்கை தயார் செய்ய முடியும். தற்போது வியாபார நோக்கில் செய்து வரும் இந்த கட்டிலை சேவை நோக்கத்துடன் செய்ய விருப்பமாக உள்ளது. அதற்கு அரசு உரிய ஊக்கமும் முயற்சியும் இடத்தில் தொழிற்சாலை போன்று அமைத்து தந்தால், ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி நோயாளிகளையும் பயனடைய செய்ய முடியும்." எனக் கூறினார்