நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை மீனவர்கள் அட்டூழியம்
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி வலை மற்றும் மீன்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை மீனவர்கள் அட்டூழியம் Sri Lankan fishermen attacked Tamil Nadu fishermen in the middle of the sea! நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை மீனவர்கள் அட்டூழியம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/15/082c3675b69dbfff83facd63d5e9bdf71665816488980186_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதுபோன்று இலங்கை மீனவர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், படகுகள், மீன்பிடி உபகரணங்கள் பறித்துக்கொள்வதுமாக இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்றளவும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்பவருக்கு சொந்தமான திலகவதி என்ற பெயர்கொண்ட ஒரு பைபர் படகில் படகு உரிமையாளரான 25 வயதான பூவரசன், அதே ஊரைச் சேர்ந்த 30 வயதான தென்னரசன், 60 வயதான ஆறுமுகம், 24 வயதான நிவாஸ் மற்றும் சந்திரபாடியை சேர்ந்த 34 வயதான அருள்ராஜ், 32 வயதான சரத் ஆகிய 6 பேர் கடந்த 12 -ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கோடியக்கரையில் இருந்து 20 நாட்டிகள் மையில் வட கிழக்கில் இலங்கை எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நேற்று இரவு வெள்ளிக்கிழமை சுமார் 10 மணி அளவில் நான்கு படகுகளில் இலங்கையில் இருந்து வந்த மீனவர்கள் பூவரசன் படகு மீது மோதி வலை மற்றும் மீன்களை அள்ளிச் சென்றதுடன், தங்களை கற்கள், கம்பு, சுலுக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியதாகவும், இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தப்பித்து இன்று அதிகாலை பெருமாள் பேட்டை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் காயம்பட்ட மீனவர்கள் ஆறு பேரும் தற்போது தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தரங்கம்பாடி கடலோர காவல் நிலையம், மற்றும் பொறையார் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை மீனவர்களாலும் இலங்கை கடற்படையினராலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாக இருந்து வரும் நிலையில் இதனை இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் தடுக்க மத்தியில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தார். இது குறித்து மேலும் சில மீனவர்கள் கூறுகையில், பல ஆண்டு காலமாக இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்களால் தாங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இதனால் வரை உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் தங்களை உதாசீனம் படுத்தி தங்களது உயிர் உடமைகளை இழப்பதற்கு காரணமாக இருந்து வருகின்றனர் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)