TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay Speech: 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் செங்கோட்டையனைத் தொடர்ந்து முக்கிய அரசியல் பிரபலங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக விஜய் சூசகமாக தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையனைத் தொடர்ந்து நிறைய பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார்கள் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள விஜயபுரி அம்மன் கோயில் திடலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 2026ம் ஆண்டு தேர்தல் களத்தில் இருப்பவர்களை மட்டுமே நாங்கள் எதிர்கிறோம். எதிரிகள் யார் என சொல்லி விட்டு தான் வந்திருக்கிறோம். நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை இலவசம் என ஏன் சொல்கிறீர்கள்?. என் மக்கள் கௌரவத்துடன் வாழ வேண்டும் என்றால் அவர்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைத்தரம் உயர வேண்டும்.
மேலும் தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசும் உங்கள் அரசியல் எனக்கு வேண்டாம். நான் எத்தனை நிமிடம் பேசினாலும் அரசியல் தான் பேசுகிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னை பற்றி தான் பேசுகிறேன். அது அரசியல் தானே”என தெரிவித்தார்.
தவெகவில் இணையும் முக்கிய நபர்கள்
இதனையடுத்து, “நம்முடன் அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் சேர்ந்தது மிகப்பெரிய ஒரு பலம். அவரைப் போல நிறையப் பேர் கட்சியில் சேர இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நாம் உரிய அங்கீகாரத்தை கொடுப்போம்” எனவும் விஜய் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தன்னைக் காண வந்த மக்களுடன் அவர் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது விஜய்க்கு செங்கோட்டையன் வெள்ளி செங்கோல் பரிசளித்தார்.
இந்த நிலையில் விஜய் கடைசியில் கட்சியில் நிறைய பேர் இணையப் போகிறார்கள் என்ற கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது. செங்கோட்டையனை தொடர்ந்து திராவிட கழக பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்படும் வைத்திலிங்கம் இணையவுள்ளதாக கூறப்பட்டது. அதேபோல் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாளையும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வைப்பதற்கான பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
செங்கோட்டையனும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் தவெகவில் இணைவார்கள் என கூறி வருகிறார். ஈரோட்டில் பரப்புரை முடித்த பின்னர் மாலையில் தான் விஜய் மீண்டும் சென்னை புறப்படுகிறார். இந்த இடைப்பட்ட நேரத்தில் கட்சியில் இணையவுள்ளவர்களை காண உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் நிர்வாகிகள் யார் விஜய் பக்கம் செல்லவுள்ளார்கள் என தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர்.





















