Onion Price: குறையும் சின்ன வெங்காயத்தின் விலை.. குஷியில் பொதுமக்கள்.. காரணம் என்ன?
தமிழ்நாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு சிலோ சின்ன வெங்காயம் அதிகபட்சமாக ரூ. 60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ. 40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்துக்கு எப்போதுமே மவுசு அதிகம் தான். சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை அதன் விலை எப்போதுமே சீராக இருக்காது. வரத்து பொறுத்து விலை ஏற்ற இறக்கமாக இருக்கும். விளைச்சல் குறைந்து வரத்து பாதிக்கப்பட்டால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயரும். ஒரு சில காலக்கட்டத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில் சின்ன வெங்காயத்தின் விளைசல் சீராகி விலை குறையும் என தெரிவித்து இருந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படும். அதை தவிர்த்து ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும்.
பருவ மழை காலங்களில் விளைச்சல் பாதிக்கப்படும். அப்படி விளைச்சல் பாதிக்கப்படும் போது விலை ரூ.100 கடந்து விற்பனை செய்யப்படும். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.150-ஐ கடந்தது. அதேபோல் டிசம்பர் மாதம் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100 என்ற அளவில் இருந்தது.
தற்போது வானிலை சற்று சீரடைந்துள்ள நிலையில் சின்ன வெங்காயத்தின் சிலை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்தவகையில், தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-60 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தை என்பது மொத்த வியாபார பகுதியாகும். அங்கிருந்து தான் பிற பகுதிகளுக்கு சில்லறை வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள். அப்படி வாங்கிச் செல்பவர்கள் குறைந்த பட்சம் ரூ.20 –ம், அதிகபட்சம் ரூ.50 வரையும் அதிகரித்து விற்பனை செய்வார்கள். கோயம்பேட்டில் விலை குறைவாக இருந்தாலும் சில்லறை கடைகளில் சற்று அதிகரித்து தான் இருக்கும்.
இந்நிலையில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி சந்தைகளில் ரூ 60 முதல் விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் வரத்தும் வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் கடந்த ஆண்டு தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வட மாநிலங்கள் டெல்லி ஆகிய இடங்களில் ஒரு கிலோ தக்களி ரூ. 300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. பின் விளைச்சல் சீரானதும் தக்காளி விரை சரசரவென சரிந்தது.