அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
கோவை மாவட்டத்தின் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சிங்கை ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அவர் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதிமுகவில் மாணவர் அணி மாநில செயலாளராக பணியாற்றி வந்த சிங்கை ராமசந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார். இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஏற்படும் சரிவு
கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, 2026 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சி 47 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான பாமக 4, அமமுக மற்றும் பாஜக 1 என மொத்தமாக 53 இடங்களில் வெற்றி பெற்றது. இதனிடையே தேர்தல் தோல்வி காரணமாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியைப் பிடித்த தவெக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை, பெருந்துறை ஆகிய 6 தொகுதிகளின் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அதுமட்டுமல்லாமல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் என பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிங்கை ராமச்சந்திரன் விலகல்
இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சிங்கை ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அவர் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நீண்ட ஆழ்ந்த யோசனைக்குப் பின் இந்த முடிவை எடுத்துள்ளேன். கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். இது கோபம், வருத்தம், தனிப்பட்ட எதிர்பார்ப்பு போன்றவற்றால் எடுக்கவில்லை. மனசாட்சிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என எடுத்துள்ளேன்.
1987 ஆம் ஆண்டு, என் தந்தை மறைந்த சிங்கை கோவிந்தராசு வார்டு செயலாளராக இருந்தபோது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் என் பெற்றோரின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினார். எனக்கு ஜி. ராமச்சந்திரன் என்ற பெயரை வைத்தது புரட்சித்தலைவி அம்மா. ஒரு சாதாரண மில் தொழிலாளியாக இருந்த என் தந்தையை சட்டமன்ற உறுப்பினராக உயர்த்தியதும் அம்மாதான். என் தந்தை திடீரென மறைந்த பிறகு, என் தாய் அனைத்து சிரமங்களையும் தனியாக எதிர்கொண்டு, என்னை நல்ல கல்வியுடனும் உயர்ந்த பண்புகளுடனும் வளர்த்தார்.
சிறு வயதிலிருந்தே புரட்சித்தலைவி அம்மாவை நேரில் சந்தித்து, அவருடைய தலைமையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் வாழ்நாளின் ஒரே கனவாக இருந்தது. 18 வயதில் கட்சியில் சேர்ந்த நான் பின்னர் இளைஞர் பாசறை வார்டு செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதன்பின் கல்வி மூலம் அம்மாவின் கவனம் ஈர்த்தேன்.
Also Read: MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர், மண்டல செயலாளர், மாநிலத் தலைவர். மாணவர் அணி மாநில செயலாளர் என எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் முழு மனதுடன் பணியாற்றினேன். 2016, 2019, 2021 மற்றும் 2026 தேர்தல்களில் எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக முழுமையாக உழைத்தேன். 2024 மக்களவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் என்னை வேட்பாளராக அறிவித்தபோதும், அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், பொருளாதார ரீதியாகவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்.
கடந்த சில மாதங்களாக கட்சிக்குள் நடந்த சில நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தன. என் கருத்துகளையும் கவலைகளையும் கட்சித் தலைமையிடம் முழு நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பகிர்ந்தேன். ஆனால், என் மனசாட்சியுடன் சமரசம் செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டபோது. இந்த முடிவைத் தவிர வேறு வழியில்லை என்று கருதி விலக முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















