விற்பனை நோக்கில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள்; எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி
சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு சிறிய மற்றும் பெரிய உணவுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறையை மீறி, விற்பனை நோக்கில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல்லில் ஷவர்மா என்ற மாமிச உணவு சாப்பிட்டு பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர்- கோவை சாலையில் உள்ள மாஷா அல்லா என்ற தனியார் உணவகத்தில் உணவுத்துறை பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருந்ததை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர், பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம் என மாவட்ட முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அங்கு உள்ள உணவகங்களில் தயார் செய்யப்படும் உணவுகளின் தரத்தை பரிசோதனை செய்து வருகின்றனர். கரூரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு சிறிய மற்றும் பெரிய உணவுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி உணவு தயாரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் பற்றிய புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்க ஸ்டிக்கர் ஒட்டிச் சென்றுள்ளனர். அதேபோன்று புகார்கள் தெரிவித்தால் அவர்களது ரகசியம் காக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குளித்தலையில் வாட்டர் பாட்டிலில் பல்லி விழுந்த விவகாரம் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகு உண்மை நிலை அறிந்து அதன் பேரில் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.