சாத்தானின் பிள்ளைகள் என சீமான் கூறியதில் தவறு இல்லை.. சப்போர்டுக்கு வந்த சாட்டை துரைமுருகன்
”சீமானின் வார்த்தைகளில் தெளிவு இருக்கும். சாத்தானின் பிள்ளைகள் என அவர் அவசரத்தில் பேசிய வார்த்தைகள் இல்லை. மக்கள் தெளிவு பெற வேண்டும்” என்று சாட்டை துரைமுருகன் பேசியுள்ளார்
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சாத்தானின் பிள்ளைகள் என சீமான் பேசியதில் எந்த தவறு இல்லை என சாட்டை துரைமுருகன் பேசியுள்ளார்.
சமீபத்தில் இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருந்தது சர்ச்சையாகி உள்ளது. சீமானின் பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில, நாம் தமிழ் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் ஏபிபி நாடு யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்க்காணலில் சீமானின் பேச்சு சரியானது என கூறியுளார்.
சாட்டை துரைமுருகன் பேசுகையில், “யூத, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களில் தீய உருவமும், தீய குணங்களும், தீய சக்தியை கொண்டுள்ளவர் தான் சாத்தான் அல்லது சைத்தான். அந்த சாத்தானுக்கு ஓட்டுப்போட்டவர்கள் சைத்தானின் பிள்ளைகள். திமுகவுக்கு ஓட்டுப்போட்ட எல்லாரையும் சைத்தானின் பிள்ளைகளாக நாங்கள் பார்க்கிறோம். இந்து மதத்தில் நெறிமுறைகள் இல்லை. ஆனால் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்தில் எப்படி வாழ வேண்டும் என்றும், தவறு செய்ய கூடாது என்பது போன்ற நெறிமுறைகள் உள்ளன. அந்த நெறிமுறைப்படி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களும், ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துவர்களும் பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களுக்கு வழிபாட்டிற்கு செல்கின்றனர். அப்படி சென்று வழிபாடு நடத்தும் அவர்கள் தவறு செய்பவர் பக்கம் நிற்பதுதான் முரண்பாடானது.
இறை மொழிகளுக்கும் தேவன் கட்டளைக்கும் எதிராக நடக்கும் திமுவுக்கு அந்த 18 சதவீதத்தை கொண்ட கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்கள் வாக்களிக்கின்றனர். இதனால் அவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக உள்ளனர்” என்றார்.
மக்கள் வாக்களிக்காததால் சீமானுக்கு விரக்தி உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த சாட்டை துரைமுருகன், ”ஓட்டு வரவில்லை என்று சீமானுக்கு விரக்தி இல்லை. ஊழல், லஞ்சம், கனமவளம் சுரண்டல், பெண்கள் மீதான வன்முறை உள்ளிட்ட எல்லா தவறுகளுக்கும் உடந்தையாக இருப்போரை தான் விமர்சிக்கின்றார். தேவமொழிக்கு எதிராகவும், பைபிள், குரானுக்கு எதிராக செல்ல வேண்டாம் என்ற நோக்கத்தில் தான் சாத்தானின் பிள்ளைகள் என சீமான் கூறியுள்ளார். தவறு செய்யும் மக்களை நெறிமுறை படுத்தும் விதமாக சீமான் கூறியதில் தவறு ஏதும் இல்லை. பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா தடை செய்தபோதும், என்.ஐ.ஏ. ரெய்டு நடத்திய போதும் குரல் கொடுத்தவர் சீமான் மட்டும்தான். ஆப்கானிஸ்தான் பிரச்சனை, சிரியா கலவரத்தின்போதும், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டபோதும் முதல் ஆளாக குரல் கொடுப்பவர் சீமான் தான். அப்படி இருக்கும்போது அவர் இஸ்லாம் மதத்துக்கு எதிரானவர் ஆவாரா..?” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,” சீமானின் வார்த்தைகளில் தெளிவு இருக்கும். சாத்தானின் பிள்ளைகள் என அவர் அவசரத்தில் பேசிய வார்த்தைகள் இல்லை. மக்கள் தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பேசியுள்ளார். மக்கள்தான் அதை புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலையை உறவு முறை என்ற அடிப்படையில் அவரை தம்பி என சீமான் கூறினார். அதற்காக பாஜகவுக்குள் கூட்டணி இல்லை. ஆரம்பத்தில் இருந்தே கருத்தியல் ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் பாஜகவை நாம் தமிழர் கட்சி எதிர்த்து வருகிறது. ஆனால், சீமான் பேசும் சிலவற்றை மட்டும் எடிட் செய்து தவறான கண்ணோட்டத்தில் திமுகவினர் பரப்புகின்றனர்.” என்றார். மேலும் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்த திமுக, மணிப்பூர் பெண்களுக்காக குரல் கொடுக்க தகுதி இல்லை என்றும் திமுகவை விமர்சித்தார்.