மத்திய அரசின் மெத்தனப் போக்கே, தொடரும் தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம் - எஸ்டிபிஐ குற்றச்சாட்டு
வாழ்வாதாரத்தை தேடிச்செல்லும் மீனவர்களின் வாழ்க்கையே கேள்விக் குறியாகும் நிலை உள்ளது. ஆகவே, தமிழக அரசு இதன் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 25 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்ததோடு அவர்களின் 3 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
இலங்கை கடற்படையின் தொடரும் இத்தகைய அத்துமீறல் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நாகை மற்றும் கடலூர் மாவட்ட மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, அவர்கள் மீது அநியாயமாக கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று மீண்டும் 25 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் ஜனவரியிலிருந்து தற்போது வரை இந்திய மீனவர்களின் 32 படகுகளையும், 238 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையின் அத்துமீறலை ஒன்றிய அரசு தடுக்கத் தவறியதும், தமிழக மீனவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் உள்ள மெத்தனப் போக்குமே தொடரும் இந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை விரட்டி அடிப்பது, கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது, அவர்களின் வலைகளை சேதப்படுத்துவது என பல்வேறு இன்னல்களை செய்து வருகின்றது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் முடிவின்றி தொடர்கதையாக சென்றுகொண்டிருக்கிறது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இத்தகைய நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். வாழ்வாதாரத்தை தேடிச்செல்லும் மீனவர்களின் வாழ்க்கையே கேள்விக் குறியாகும் நிலை உள்ளது. ஆகவே, தமிழக அரசு இதன் தீவிரத்தை உணர்ந்து, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும், உரிமையையும் உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றிய, மாநில அரசுகள் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்