மணல்குவாரி ஒப்பந்தங்களை பெற்றதும் இல்லை, இனி பெறப்போவதும் இல்லை - சேகர் ரெட்டி விளக்கம்..!
அரசிடம் இருந்து மணல் குவாரி ஒப்பந்தங்களை இதுவரை எடுத்ததில்லை எனவும், இனியும் எடுக்கப்போவதில்லை எனவும் சேகர் ரெட்டி அறிக்கை விடுத்துள்ளார்
கடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு அமலானபோது சட்டவிரோதமாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை கோடி கணக்கில் சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து வருமான வரித்துறை கைப்பற்றியது, இந்த ரெய்டு மூலம் தமிழ்நாடு மக்களுக்கு பரவலாக அறியப்பட்டவர் சேகர் ரெட்டி. இந்த சம்பவத்தை தொடர்ந்து சேகர் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்துவந்தது. வழக்கின் இறுதியில் முறைகேடு செய்ததற்கான ஆதரங்கள் ஏதுமில்லை என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சேகர் ரெட்டியை விடுவித்திருந்தது.
அரசு ஒப்பந்ததாரர் என்பதால் அப்போதைய அதிமுக அரசின் ஆதரவும், அமைச்சர்களின் ஆதரவும் இருந்ததாக திமுகவால் விமர்சிக்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை பரவலின்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து சேகர் ரெட்டி ஒரு கோடி ரூபாய் கொடுத்ததும் அது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் சேகர் ரெட்டி என்ற பெயரை குறிப்பிடாமல் சேகர் என்ற பெயரை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது திமுக அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளை 300 கோடியில் சேகர் ரெட்டி ஏலம் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு ஆளும் திமுக அரசின் ஆதரவு உள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த செய்தி தொடர்பாக தொழிலதிபர் சேகர்ரெட்டி அறிக்கை மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதால் இனி வரும்காலங்களில் நானும், எனது நிறுவனமும் அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை என சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சேகர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் தமிழகத்தில் மிக அற்புதமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு களங்கம் வேற்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த சில நாட்களாக என்னை பற்றி சமூக ஊடகங்களிலும் சில பத்திரிகைகளிலும் எனக்கும் மற்ற சிலருக்கும் தமிழ்நாடு அரசின் பொதுப்பணிதுறையில் மணல் குவாரிகள் ஒப்பந்தம் கொடுத்ததாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. எனது பெயரிலோ, என் நிறுவனத்தின் பெயரிலோ, கடந்த 15 வருடத்தில் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை இதுவரை எந்த ஒரு ஒப்பந்தமும் நாங்கள் பெற்றதில்லை வேண்டுமென்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பொதுப்பணி துறையில் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று மணல் கிடங்கு நடத்தி வந்தவர்களிடம் மணல் வாங்கி நாங்கள் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்துவந்தோம். இதை தவிர நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றது இல்லை. இனி வரும் காலங்களிலும் நானும் எனது நிறுவனமும், தமிழ்நாடு அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடபோவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். எனவே, இதுபோன்ற செயல்களில் எனது பெயரை பயன்படுத்தி ஒரு பரபரப்பை உருவாக்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக மணல் விற்பனையாளர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்