Salem Leopard: மீண்டும் மாட்டை வேட்டையாடிய சிறுத்தை - அச்சத்தில் சேலம் மக்கள்
ஒரு வாரத்திற்கு பிறகு சிறுத்தை மீண்டும் வேட்டையாட குடியிருப்புக்குள் வந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பக்கநாடு, கோம்பைக்காடு பகுதியில் மாதையன் என்பவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். தினசரி காலை மேய்ச்சலுக்கு கால்நடைகளை அனுப்பி பின்னர் மாலை வீட்டின் அருகில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி மாடுகளை கட்டி வைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை மாதையன் எழுந்து பார்த்தபோது ஒரு மாடு காணாமல் போனதை கவனித்தார். உடனடியாக அருகில் தேடிய போது மாட்டை மர்ம விலங்கு வேட்டையாடியது தெரிய வந்தது.
சிறுத்தை நடமாட்டம் உறுதி:
உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் விரைந்து வந்த வனத்துறையினர் மாதையன் வீட்டின் அருகில் கேமராவை பொருத்திச் சென்றனர். மேலும் அங்கு ஒரு கூண்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வனத்துறையினர் வைக்கப்பட்ட கேமராவை ஆய்வு செய்தபோது சிறுத்தை அதே இடத்திற்கு மீண்டும் வந்தது தெரியவந்தது. இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
டிரோன் மூலம் சிறுத்தையை தேடும் பணி தீவிரம்:
சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் கோம்பைக்காடு பகுதியில் 13 இடங்களில் கேமரா மற்றும் கூண்டுகளை அமைத்துள்ளனர். சிறுத்தை மீண்டும் வேட்டைக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் குழுக்கள் அமைத்து டிரோன் கேமராவை பறக்கவிட்டு வனப்பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக சிறுத்தையின் கால் தடத்தை வைத்து வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், கோம்பைக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம், குழந்தைகளை வனப் பகுதி ஒட்டி உள்ள இடங்களுக்கு அனுப்ப வேண்டாம் உள்ளிட்டவைகளை வனத்துறையினர் கூறி வருகின்றனர்.
மீண்டும் சிறுத்தை வேட்டை:
இந்த நிலையில் நேற்று அதிகாலை எடப்பாடி அருகே உள்ள ஆமனத்தூர் பகுதியில் பூபாலன் என்பவருக்கு சொந்தமான மாடு ஒன்று வேட்டையாடப்பட்டுள்ளது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு வாரத்திற்கு பிறகு சிறுத்தை மீண்டும் வேட்டையாட குடியிருப்புக்குள் வந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சேலத்தில் மூன்றாவது சிறுத்தை:
கடந்த இரண்டு மாதங்களாக சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்து சிறுத்தையை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது எடப்பாடியிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் மேட்டூரில் நடமாடிய சிறுத்தை எடப்பாடி வந்துள்ளதா? அல்லது எடப்பாடியில் புதிய சிறுத்தை நடமாடி வருகிறதா என்று வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேட்டூரில் நடமாடிய சிறுத்தை எடப்பாடிக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேட்டூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவசாயி ஒருவர் வீட்டில் மாடுகளை சிறுத்தை வேட்டையாடியது. அந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. அதே சிறுத்தை தற்போது வனப் பகுதி வழியாக எடப்பாடி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேட்டூரில் இருந்து எடப்பாடி வரை மலைத்தொடர் இருப்பதால் அப்பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். எனவே சிறுத்தை உணவிற்காக மேட்டூரில் இருந்து எடப்பாடி வரை வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை:
சேலம் மாவட்டத்தில் சுற்றி திரியும் சிறுத்தைகளை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வெளியே செல்வதற்கு அச்சமாக உள்ளதாகவும், மாடுகளை வேட்டையாடும் சிறுத்தை மனிதர்களை வேட்டையாடுவதற்கு முன்னர் அதனை பிடிக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.