Salem Flood: திருமணிமுத்தாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்... சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
சேலம் திருமணிமுத்தாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் மழை வெள்ளத்தில் மிதக்கும் சேலம் மாநகரம் – சேலம் –பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.
திருமணிமுத்தாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் காரணமாக சேலம் மாநகரின் தாழ்வான பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 671 மில்லிமீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 98 மில்லிமீட்டரும், சேலம் மாநகரப் பகுதியில் 94 மில்லிமீட்டரும் மழை பதிவானது. சேலம் மாநகரில் பெய்த கனமழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதியில் வெள்ள நீர் புகுந்தது. சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பெய்த கனமழையால் பேருந்து நிலையம் நீரில் மூழ்கியது. இதில் சேலத்தில் இருந்து வெளியூர் செல்ல வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சேலம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள குப்தா நகர், சின்னேரி வயல்காடு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
சேலம் மாநகரப் பகுதியில் பெய்த கனமழை மற்றும் ஏற்காட்டில் பெய்த மழை காரணமாக திருமணி முத்தாற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டபடி கரைபுரண்டோடுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாயாக காட்சியளித்த திருமணிமுத்தாறு கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தால் கரைபுரண்டோடுகிறது. திருமணிமுத்தாறு சேலம் மாநகரின் முக்கியப்பகுதிகள் வழியாக நாமக்கல் வரை செல்கிறது. நகரை ஊடறுத்து செல்லும் திருமணிமுத்தாற்றில் கரை புரண்டோடுவதால் நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. கந்தம்பட்டி பகுதியில் கரைபுரண்டோடும் வெள்ளம் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புகுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்ததால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளநீர் முழுமையாக வடியும் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
கந்தம்பட்டி பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் சிவதாபுரம் பகுதியில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சேலம் மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுத்து வெள்ள நீரை வடியச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்காடு மலை பாதையில் மண் சிறிது ஏற்பட்டுள்ளதால் இரண்டு நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் பாறைகள் சாலையில் விழுந்ததால், சாலை முழுவதும் சேதுமடைந்து காணப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் மலை பதிவாகி வருகிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கேட்டுக் கொண்டுள்ளார்.
கனமழை காரணமாக சேலம் மாவட்டத்திற்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இன்றும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.