பெற்றோர்களால் 62 ஆயிரத்திற்கு கொத்தடிமைகளாக விற்கப்பட்ட 4 இருளர் சமூக குழந்தைகள் மீட்பு
குடும்ப வறுமை காரணமாக கோவிந்தராஜிடம், சுந்தரராஜ் தனது நான்கு மகன்களையும் மொத்தம் 62 ஆயிரத்திற்கு ஆடுமேய்க்கும் கொத்தடிமை தொழிலாளர்களாக விற்று விட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் நபர்களிடம் இரண்டு ஆண்டுகளாக கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்து வேலை பார்த்து வந்த இருளர் சமூகத்தை சேர்ந்த நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் வட்டம் புதுார் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (45). இவரது மனைவி பாப்பாத்தி (40), இவர்கள் இருவரும் கருவேல மரங்களை வெட்டி கரிப்புகை போடும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமான ஒரு மகளும், மற்றும் 10 வயதிற்திற்குட்டப்பட்ட 4 மகன்கள் என ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
கரிப்புகை போடும் தொழில் செய்து வரும் சுந்தரராஜனுக்கு, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த கோவிந்தராஜ் (49) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இதனால் இருவரும் நண்பர்களானார்கள். மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வந்த கோவிந்தராஜ், அவரது அண்ணன் மணிராசு (51), மைத்துனர் செல்வம் (45), ஆகியோருடன் கடந்த சில ஆண்டுகளாக தஞ்சாவூரில் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள வயல்களில் இயற்கை உரத்திற்காக செம்மறி ஆடுகளை கிடை போடும் தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கரிப்புகை போடும் தொழில் செய்து வரும் சுந்தரராஜனுக்கு போதுமான வருமானம் இல்லாததால், குடும்பம் வறுமை ஏற்பட்டது. இதன் காரணமாக கோவிந்தராஜிடம், சுந்தரராஜ் தனது நான்கு மகன்களையும் மொத்தம் 62 ஆயிரத்திற்கு ஆடுமேய்க்கும் கொத்தடிமை தொழிலாளர்களாக விற்று விட்டார்.
இதில் முதல் இரண்டு பேர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிந்தராஜிடம் ஆடுகளை மேய்த்து வந்துள்ளனர். மூன்றாவது சிறுவன் கோவிந்தராஜின் சகோதரர் மணிராசுவிடமும், நான்காவது சிறுவன், கோவிந்தராஜின் மைத்துனர் செல்வத்திடம் கொத்தடிமை தொழிலாளர்களாக, அவர்களுக்கு வேலை செய்தும், ஆடுகளை மேய்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜிவிடம் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த முதல் இரண்டு சிறுவர்கள், இருவரும், கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, காலை அங்கிருந்து தப்பியோடி, தஞ்சாவூர் பைபாஸ் சாலையில், மன்னார்குடி பிரிவு சாலைக்கு வந்தனர். பின்னர் சாலையில் வந்தவர்களிடம், தனது சகோதரர்களின் நிலைமை குறித்து கூறியுள்ளனர். தொடர்ந்து அவர், 1098 என்ற சைல்டு லைனிற்கு தொடர்பு கொண்டு, சிறுவர்களை பற்றி தகவலை தெரிவித்தார்.
இதனையடுத்து, சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த அன்புமணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புற தொடர்பு பணியாளர் திணேஷ்குமார் மற்றும் தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலைய போலீசார் ஆகியோம் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் நின்றிருந்த சிறுவர்களை மீட்டனர். பின்னர் அச்சிறுவர்கள் கூறிய தகவலின் பேரில், மற்ற இரண்டு சிறுவர்களை மீட்டனர். இது குறித்து தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டும் முறையான விசாரணை நடைபெறாததால், அச்சிறுவர்கள் நான்கு பேரும் பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல், அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு சிறுவர்கள் மீட்டப்பட்ட விஷயத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, 10 வயதிற்குட்ப்பட்ட உள்ள சிறுவர்கள் நல்வழிப்படுத்திட, தஞ்சாவூர் ஆர்டிஒ ரஞ்சித், நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.