வகுப்பறையிலே துயரம்! 9ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து மரணம் - சோகத்தில் மக்கள்
ராணிப்பேட்டையில் வகுப்பறையிலே மயங்கி விழுந்த 9ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது வாலாஜாபேட்டை. இந்த பகுதியை அடுத்து அமைந்துள்ளது சுமைதாங்கி. இந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 14 வயதான ஈஷா அத்விதா என்ற சிறுமி 9ம் வகுப்பு படித்து வந்தார்.
வகுப்பறையிலே மயங்கி விழுந்த மாணவி:
இவரது தந்தை வசந்தகுமார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறையில் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். ஈஷா அத்விதா வழக்கம்போல கடந்த 9ம் தேதி பள்ளிக்குச் சென்றிருந்தார். அங்கு தனது சக தோழிகளுடன் வழக்கம்போல அவர் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, அவர் திடீரென வகுப்பறையிலே மயங்கி விழுந்தார். இதனால், அத்விதாவின் சக தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை அதிர்ச்சியில் உறைந்தார். அவர் மாணவி அத்விதாவை எழுப்பினர். ஆனால், அவர் மயங்கிய நிலையிலே இருந்தார். இதையடுத்து, சக ஆசிரியர்களிடம் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை தகவல் தெரிவித்தார். அவர்கள் மாணவியை வந்து சோதித்தபோது மாணவி மயக்க நிலையிலே இருந்ததால் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, உடனடியாக ஆசிரியர்கள் மயக்கம் அடைந்த மாணவி அத்விதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
9ம் வகுப்பு மாணவி மரணம்:
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி அத்விதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மாணவியின் மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த மாணவி அத்விதாவிற்கு ஏற்கனவே இதயத்தில் பிரச்சினை இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரியவந்தது. இந்த நிலையில், மாணவி இதய பிரச்சினை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பள்ளி வகுப்பறையிலே மாணவி மயங்கி விழுந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களும், குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உயிரிழந்த அத்விதாவிற்கு காவ்யா என்ற சகோதரி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.