ராம நவமி யாத்திரை: "தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது"- உயர்நீதிமன்றம் அதிரடி
தமிழ்நாட்டில் ராம நவமி யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ராம நவமி யாத்திரைக்கு 11 மாவட்டங்களில் அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராம நவமி யாத்திரை:
ராம நவமியை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை யாத்திரை செல்ல, கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த யாத்திரையானது, கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து, கன்னியாகுமரி களியக்காவிளை வரை செல்வதாக நிர்ணயம் செய்யப்பட்டது. கேரள மாநிலத்தில் இருந்து, தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரியை அடைவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரையில் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அனுமதி மறுப்பு:
இந்த மனுவில், ராம நவமி யாத்திரை செல்ல தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, தேர்தல் காரணத்தால் யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு அனுமதி தராதது சரி என்று நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் மனுதாரர் தரப்பில் தெரிவித்ததாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமாவது, யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தது.
இதுகுறித்து 2 நாட்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.