தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக...அமித் ஷாவை தொடர்ந்து ஒருநாள் பயணமாக இன்று சென்னை வரும் ராஜ்நாத் சிங்!
ஒருநாள் பயணமாக வருகை தரும் ராஜ்நாத் சிங், சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில், மாலை 5 மணியளவில் நடைபெறும் பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் ஏற்கனவே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், மூன்றாவது முறையாக வென்று ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.
பரபரப்பாகும் தேர்தல் களம்:
கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்று பெறுவதற்கு உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களே காரணம். மேல்குறிப்பிட்ட இந்த மாநிலங்களில், 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் பாஜகவே வெற்றிபெற்றது.
ஆனால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு எதிரான மன நிலை, பிகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உருவாகியுள்ள புதிய கூட்டணி ஆகியவை பாஜகவுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் ஏற்படும் இழப்பை தென் மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் வெற்றிபெற்று சரிகட்ட பாஜக முயற்சித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் வெற்றிபெற பாஜக முயற்சி செய்து வருகிறது.
சென்னை வரும் ராஜ்நாத் சிங்:
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வர உள்ளார். ஒருநாள் பயணமாக வருகை தரும் ராஜ்நாத் சிங், சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில், மாலை 5 மணியளவில் நடைபெறும் பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரிடம் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மாலை 6.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் ராஜ்நாத்சிங் புறப்பட்டுச் செல்கிறார்.
கடந்த 10ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அடுத்தாண்டு மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக முயற்சித்து வரும் நிலையில், அமித் ஷாவின் வருகையை தொடர்ந்து, ராஜ்நாத் சிங்கின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை குறிவைத்து வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. தென் சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், வேலூர், சிவகங்கை, ஈரோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட பாஜக மேலிடம் விரும்புவதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மற்ற தொகுதிகளை காட்டிலும் தென் சென்னை தொகுதியை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் பாஜக குறியாக உள்ளதாக கூறப்படுகிறது.