Perarivalan Bail : பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி? நீதிமன்ற விவாதத்தில் நடந்தது என்ன? வழக்கறிஞர் பிரபு விளக்கம்..!
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவதில் மத்திய அரசு நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக பேரறிவாளனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக வழக்கறிஞர் பிரபு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, பேரறிவாளனுக்கு இன்று ஜாமீன் வழங்கியுள்ளனர். அவர் ஏற்கனவே பரோலில் உள்ளார். பரோலில் ஏராளமான கெடுபிடிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருப்பதாக கூறினோம். விடுதலை வழக்கை இறுதியாக விசாரிப்பதற்கு முன்பு ஒரு ஜாமீன் அளிக்க அவர்கள் முடிவு செய்தனர். இதற்கு, மத்திய அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
தமிழ்நாடு அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராகேஷ் சிறப்பாக வாதாடினர். அவர் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவிற்கே 14 ஆண்டுகளில் தீர்ப்பு வழங்கினர். ஆனால், இந்த வழக்கிற்காக சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர். 302 வழக்கில் குடியரசுத் தலைவருக்குதான் அதிகாரம் உள்ளது போல இருக்கிறது என்றார். எங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் அழுத்தமாக வாதாடினோம்.
இறுதி விசாரணைக்கு போதிய நேரம் இல்லாததால் இப்போதைக்கு பிணையில் விடுகிறோம். 1991ம் ஆண்டு முதல் இவர்கள் 7 பேரும் சிறையில் உள்ளனர். இதுவரை இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. பரோலில் சிலருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் கஷ்டப்பட்டுதான் கிடைத்தது. வழக்கமான நிபந்தனைகளே விதிக்கப்பட்டுள்ளது.
மாதத்திற்கு ஒருநாள் உள்ளூர் காவல்நிலையத்தில் பேரறிவாளன் கையொப்பமிட்டால் போதும். இறுதி விசாரணையை நடத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் எண்ணம். ஏனென்றால், ஆளுநர் தனக்கு அளிக்கப்பட்டதை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் இரண்டு, மூன்று முறை கூறினர். அடுத்த உத்தரவு வரும் வரை பேரறிவாளன் பிணையில் இருப்பார்.
மத்திய அரசாங்கம் இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு கொண்டு வரும் எண்ணத்தில் இல்லை என்று நீதிமன்றத்திற்கு தெரிந்ததால் பேரறிவாளனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் மற்ற 6 பேருக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது ”
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்