Rajiv Case: விடுதலை செய்யக் கோரும் நளினி மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
எழுவர் விடுதலை தொடர்பான எந்தவொரு அரசாணையும் வெளியிடப்படவில்லை. எனவே, விடுதலை செய்யக் கோரும் மனுதாரர் நளினியின் மனு சட்டப்படி செல்லாது - தமிழக அரசு
ஆளுநரின் முடிவுக்காகக் காத்திராமல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என நளினி தாக்கல் செய்த மனுவின் விசாரணையை 3 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரகத் தலைவருக்கு இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர் அவர்கள் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், சிறையில் வாடும் நளினி, ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழுபரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதில்மனுத் தாக்கல் செய்த தமிழக அரசு," எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் இந்திய குடியரசுத் தலைவருக்குத் தான் இருக்கிறது என்ற ஆளுநரின் முடிவை மத்திய அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், எழுவர் விடுதலை தொடர்பான எந்தவொரு அரசாணையும் வெளியிடப்படவில்லை. எனவே,விடுதலை செய்யக் கோரும் நளினியின் மனு சட்டப்படி செல்லாது" என்று தெரிவித்தது.
மேலும், இந்த மனுவில் Maru Ram versus Union of India (1980) வழக்கின் வாதங்களை மேற்கோள் காட்டிய தமிழக அரசு, " அரசாணை இல்லாமல் இவர்களை விடுதலை செய்யமுடியாது. ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் குற்ற மன்னிப்பு வழங்கும் அதிகாரம் எதேச்சையானதல்ல. இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, குற்ற மன்னிப்பு வழங்கும் நடைமுறையை விரைந்து முடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. மனுதாரர் நளினியும் தனது மனுவில் இதே வழக்கை சுட்டிக் காட்டி, " 161வது சட்டப்பிரிவின்படி, ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் தன்னை விடுவிக்க வேண்டும்"எனக் குறிப்பிட்டார்.
சிக்கலை ஏற்படுத்தும்:
தமிழக அரசின் இந்த போக்கு எழுவர் விடுதலையில் மிகுந்த சட்ட சிக்கலை எற்படுத்தும் என்று பல்வேரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை பெற்றிட அனைத்து முயற்சிகளையும் திமுக மேற்கொள்ளும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. முதல்வராக பதிவியேற்ற பிறகு,கடந்த மே மாதம் எழுவர் விடுதலையில் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதம், தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது என்ற ஆளுநரின் நிலைப்பாட்டை மறைமுகமாக உறுதிபடுத்துவது போல் அமைந்தது. இதற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட கண்டன அறிவிப்பில், " 161வது சட்டப்பிரிவின்படி, எழுவரையும் விடுவிக்கத் தங்களுக்கு உரிமையிருக்கிறது என்பதை நிலைநாட்ட வேண்டிய தமிழக அரசு குடியரசுத்தலைவரிடம் கடிதமெழுதி வேண்டுகோள் வைப்பது மாநில அரசுக்கிருக்கும் அதிகாரத்தைத் தாரைவார்ப்பதற்கு ஒப்பாகும்.
161வது சட்டப்பிரிவு எனும் பொன்னான வாய்ப்பிருக்கும்போது எதற்காகக் குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதும் வெற்று நடவடிக்கை? விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டுமென உளமாற நினைத்தால் கடந்த 09.09.2018 அதிமுக அரசின் அமைச்சரவை முடிவைப்போல மீண்டுமொருமுறை அமைச்சரவையைக் கூட்டி ஆளுநரின் அடாவடித்தனத்தைக் கண்டித்து, அதே 161வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி விடுதலையை வழியுறுத்தலாமே? அல்லது Tamil Nadu Suspension of Sentence Rule, 1982, சட்டத்தின் விதி 40ஐ பயன்படுத்தி, மாநில அரசாங்கத்தின் சிறப்பு அதிகாரமான விடுப்பு அளிக்கும் உரிமையில் எழுவருக்கும் காலவரையற்ற விடுப்பு வழங்கியிருக்கலாமே?? அவைகள்தான் ஆளுநருக்கு நெருக்கடியை தரும்" என்று தெரிவித்திருந்தார்.