மேலும் அறிய
Advertisement
Rajinikanth Political Journey : நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பயணம் 1991 முதல் 2021 வரை : ஒரு பார்வை..!
கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டின் இன்றைய நாள் வரை, கடந்த 30 ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகளை பற்றிய அவுட்லைன் இது.
ரஜினிகாந்தின் அரசியல் கடந்து வந்த பாதை
- 1991ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அ.தி.மு.க.விற்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்து தனது அரசியலுக்கும், தனக்குமான உறவை தொடங்கினார். போயஸ் கார்டனில் ரஜினிகாந்தின் வாகனத்தை காவல்துறையினர் ஆய்வு செய்ததே ரஜினிகாந்தின் அந்த எதிர்ப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
- 1995ம் ஆண்டு பாட்ஷா படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்தில் நடைபெற்ற வெகுடிகுண்டு சம்பவத்தை மேற்கோள் காட்டி, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விழாவில், அப்போதைய அ.தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆர்.எம்.வீரப்பனும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1996-ஆம் ஆண்டு இன்னும் இந்த ஆட்சி நீடித்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் பேசினார். அவர் பேசியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க.-தா.ம.க கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த ஆதரவால் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. ரஜினிகாந்தின் இந்த கருத்திற்கு பிறகே, அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்களின் குரல்கள் வலுப்பெறத் தொடங்கியது. 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகும் தி.மு.க.விற்கு ஆதரவாகவே நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்துக்களும், நடவடிக்கைகளும் அமைந்தன.
- 2001 சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்தார்.
- 2002-ஆம் ஆண்டு “பாபா” திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றதற்கு, பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க.வின் எதிர்ப்பு காரணமாகவே பாபா படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்பட்டதாக கருத்துக்களும் உள்ளன.
- 2002-ஆம் ஆண்டு காவிரி பிரச்சினை விவகாரத்தில், நதிநீர் இணைப்பு மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு என்றும், நதிநீர் இணைப்பிற்காக முதல் ஆளாக தான் 1 கோடி தர தயார் என்றும் ரஜினிகாந்த் பேசியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாபா படத்திற்கு எதிர்ப்பு தெரவித்த பா.ம.க.வினர் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் போட்டியிட்டனர். ஆனால், பா.ம.க. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.
- 2004-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், தைரியலட்சுமி என்று நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு புகழாரம் சூட்டினார்.
- 2008-ஆம் ஆண்டு காவிரி நீர் விவகாரத்தில் தமிழர்கள் கர்நாடகாவின் பல பகுதிகளில் தாக்கப்பட்டிருந்த சமயத்தில், தமிழ்நாட்டிற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.
- 2009-ஆம் ஆண்டு ரசிகர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, எந்த நேரத்தில், எப்போது வர வேண்டுமோ அப்போது நிச்சயம் வருவேன் என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
- ரசிகர்களுடனான சந்திப்பின்போது ( நடிகர் ரஜினிகாந்த் அதற்கு முன்னதாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்) எனக்காக தீவிர பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நிச்சயம் நான் ஏதாவது திருப்பி செய்வேன் என்று கூறினார்.
- 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு. மோடி ஒரு சிறந்த தலைவர், நல்ல நிர்வாகி, அவர் என்று ரஜினிகாந்த் பாராட்டினார். இதனால் ரஜினிகாந்த் பா.ஜ.க.விற்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்ற கருத்துகள் பரவியது.
- 2014-ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து ஜெயலலிதா வெளியே வந்தது தொடர்பாக ரஜினிகாந்திடம் கேட்டதற்கு “மகிழ்ச்சி” என்று கூறினார்.
- 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்களுடனான சந்திப்பின்போது போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார். தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று ரஜினிகாந்த் மறைமுகமாக கூறியதாக அவரது ரசிகர்களும், விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர்.
- 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அரசியலுக்கு வரப்போவது உறுதி, 234 சட்டசபை தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறோம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் 3 ஆண்டுகளில் ஆட்சியை ராஜினாமா செய்வேன் என்று அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக ரசிகர்கள் சந்திப்பில் கூறினார்.
- 2018ம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். அப்போது, மக்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாக ரஜினிகாந்த் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சட்டசபை தேர்தலே இலக்கு என்பதால் மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
- 2019-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த நதிநீர் இணைப்பு வாக்குறுதியை மேற்கோள் காட்டி பாராட்டு தெரிவித்து இருந்தார்.
- 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி சட்டசபைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் என்று பேட்டி அளித்தார்.
- 2020-ஆம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி சென்னையில் நிருபர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் தான் முதல்வராக விரும்பவில்லை என்றும், தான் கட்சித்தலைவர் மட்டுமே ஆட்சித் தலைவராக அமரமாட்டேன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், 50 வயதுக்கு உட்பட்டோருக்கு மட்டுமே சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
- 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனவரியில் கட்சி தொடக்கம். டிசம்பர் 31-ந் தேதி அறிவிப்பு என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
- 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தியையும் நியமித்தார் ரஜினிகாந்த்
- 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி கொரோனா பரவல் உள்ளிட்ட சூழலை காரணமாக கூறி தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டார். அது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அவரது ரசிகர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.
- 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி வழக்கம்போல வாக்கு செலுத்தினார்.
- இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும் முன்பு அரசியலில் ஈடுபடலாமா? அல்லது வேண்டாமா? என்று கூறினார்.
- நிர்வாகிகளுடனான ஆலோசனை நிறைவு பெற்ற பிறகு, வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லாத காரணத்தால் மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும், அது ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றமாக செயல்படும் என்றும் இன்று ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion