Governor Family Function: அரசு செலவில் நடத்தப்பட்டதா ஆளுநரின் குடும்ப நிகழ்ச்சி? ஆளுநர் மாளிகை பரபர விளக்கம்
தமிழ்நாடு ஆளுநரின் குடும்ப நிகழ்ச்சி உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் அரசின் செலவில் நடத்தப்பட்டதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டியிருந்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் குடும்ப நிகழ்ச்சி உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் அரசின் செலவில் நடத்தப்பட்டதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், ஆளுநர் தரப்பில் இதுகுறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.'
அரசு செலவில் நடத்தப்பட்டதா ஆளுநரின் குடும்ப நிகழ்ச்சி?
தயாநிதி மாறனின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாகவும் ஆளுநரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்த தகவல்கள் தவறானவை என்பதுடன், விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை என்பதால், நடந்தவற்றை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
நடந்த உண்மைகள்:
- கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரையில், ஊட்டியில் உள்ள குடும்ப நிகழ்ச்சியை ஆளுநர் நடத்தினார்.
- ஆளுநரின் விருந்தினர்கள் அனைவரும் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ் பவனில் யாரும் தங்கவில்லை.
- விருந்தினர்கள் மட்டுமன்றி ஆளுநரின் குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கும் கூட தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. அரசு வாகனம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.
- தனியார் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் ராஜ் பவன் சமையலறை, விருந்தினர்களுக்கு தேநீர் அல்லது காஃபி வழங்குவதற்கு கூட பயன்படுத்தப்படவில்லை.
- முழு நிகழ்வுக்கான விளக்கொளி வசதிகள் ராஜ் பவனில் இல்லாமல் ஒரு தனியார் மூலம் செய்யப்பட்டன.
- மலர் அலங்காரத்துக்கான பூக்கள் கூட சந்தையில் இருந்து தனிப்பட்ட முறையில் வாங்கப்பட்டன.
- முழு நிகழ்வுக்கான பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் பெறப்பட்டனர்.
- ராஜ் பவன் ஊழியர்கள் எவரும் பயன்படுத்தப்படவில்லை.
- விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகை கட்டணம், தேநீர் மற்றும் காஃபி உட்பட உணவு வழங்குதல், விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், சேவை பணியாளர்கள் உள்பட நிகழ்வுக்கான முழு செலவையும் ஆளுநரே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார்.
- ஆளுநர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கு கூட ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீது வழங்கப்படுகிறது. அதை ராஜ் பவன் செலுத்த உரிமையிருந்தாலும் அந்த செலவினத்தையும் ஆளுநரே ஏற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
- ஆளுநர் மீது அவதூறு கற்பிக்கும் விதமாக மக்களவை உறுப்பினரை மேற்கோள்காட்டி வெளியான பொறுப்பற்ற மற்றும் விபரீத தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதையும் படிக்க: Chandrayaan-3 ROVER: வந்தது துடிப்பு...உலாவரத் தொடங்கிய ரோவர்..சற்றுமுன் நடந்த தரமான சம்பவம்!