Chandrayaan-3 ROVER: வந்தது துடிப்பு...உலாவரத் தொடங்கிய ரோவர்..சற்றுமுன் நடந்த தரமான சம்பவம்!
நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வெற்றிகரமாக ரோவர் பிரிந்த நிலையில் சந்திரயான் 3 திட்டத்தின் அறிவியல் ஆய்வுப் பணிகள் தொடங்கின.
இஸ்ரோ அறிவிப்பு:
சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ரேவரின் அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை ரோவரின் அனைத்து செயல்பாடுகளும் இயல்பாகவே உள்ளது. ILSA, RAMBHA and ChaSTE ஆகிய கருவிகள் தற்போது செயல்பட தொடங்கி உள்ளது. ரோவர் தனது ஆய்வை தொடங்கியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 24, 2023
All activities are on schedule.
All systems are normal.
🔸Lander Module payloads ILSA, RAMBHA and ChaSTE are turned ON today.
🔸Rover mobility operations have commenced.
🔸SHAPE payload on the Propulsion Module was turned ON on Sunday.
தரையிறங்கிய சந்திரயான் -3
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நேற்று மாலை 6.04 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து 6 மணி நேரத்திற்குப் பிறகு லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கியது. இந்த பிரக்யான் ரோவர் சுமார் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. பிரக்யான் ரோவரின் வேகம் அதன் செயல்பாட்டை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக மெதுவாக செல்லும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சுமார் 2 மணி நேரத்தில் பிரக்யான் ரோவர் தனது பணியை தொடங்கும் என்று ஏற்கனவே இஸ்ரோ அறிவித்திருந்தது. இதன்படி, தற்போது பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து தனது பணியை தொடங்கியுள்ளது. இதற்காக விக்ரம் லேண்டரில் சாய்வு தளம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
கண்காணிப்பு:
இந்த சாய்வு தளம் மூலமாக ரோவர் தரையிறக்கப்பட்டது. 6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையிலான இந்த ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். அப்போது நிலவில் உள்ள நீராதாரம், கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளன.
அடுத்து வரும் 14 நாட்களில் நிலவில் கண்டுபிடிக்கப்படும் முக்கிய அம்சங்களை லேண்டர் படம்பிடித்து இஸ்ரோவிற்கு அனுப்பப்பட உள்ளது. உலகிலே நிலவின் தென் துருவத்தில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த மகத்தான சாதனையை படைத்த இந்தியாவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.