(Source: ECI/ABP News/ABP Majha)
Vengaivayal issue: குடிநீரில் மலம் கலந்த விவகாரம்; 8 பேருக்கு நாளை டி.என்.ஏ. பரிசோதனை - நீதிபதி உத்தரவு
வேங்கைவயல் விவகாரத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நாளை 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நாளை 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, நாளை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி வழங்க உள்ளனர்.
குடிநீர் தொட்டியில் மலம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள வேங்கைவயல் பகுதிக்குட்பட்ட குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் மற்றொரு சமூகத்தினர் இதுபோன்று செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் என பலரும் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதுவரை இந்த மனிதாபிமானமற்ற செயலை செய்தது யார்? என்பது தெரிய வராத நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை:
சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் வழக்கின் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. பால்பாண்டி இந்த வழக்கு நடைபெற்று வரும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் டி.என்.ஏ. பரிசோதனை எடுக்க அனுமதி கோரி கடிதம் வழங்கியிருந்தார். இதையடுத்து, வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதையடுத்து, கடந்த 1-ந் தேதி தேதி இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது, அவர்கள் தாங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏன்? என்று தனித்தனியே விளக்கம் அளித்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று வந்தது. இதில், டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேரும் தங்களை விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டி.என்.ஏ. பரிசோதனை:
மேலும், நாளையே 8 பேரும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற இந்த வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல், இறையூர் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. தரப்பினர் அறிவியல்பூர்வமான ஆதாரத்திற்காக முதற்கட்டமாக 11 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், டி.என்.ஏ. பரிசோதனைக்கு அறிவுறுத்தப்பட்டவர்களில் 8 பேர் பாதிக்கப்பட்ட வேங்கைவயல் மக்கள் என்பதால், தங்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயற்சிப்பதாக அவர்கள் அச்சம்கொள்வதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை பரிசோதனை:
சி.பி.சி.ஐ.டி. தரப்பினர் சுமார் 110 பேருக்கு மேல் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினர். ஆனால், அந்த 8 பேர் தங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்று வாதமிட்டனர். அதேசமயம், நீதிபதி உத்தரவிட்டால் டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஒப்புதல் அளிப்பதாக கூறியிருந்தனர்.
இந்த நிலையிலே, அவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு நாளை காலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட உள்ளது.